திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், தங்கள் உறவினர்கள் 22 பேருடன் கரூர் தாந்தோன்றிமலை நோக்கி டூரிஸ்ட் வேனில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது முக்கொம்பு அருகே, மினி கண்டெய்னர் லாரியை டூரிஸ்ட் வாகனம் முந்தி செல்ல முற்பட்டுள்ளது. அதேவேளை, கரூரில் இருந்து திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. அதன் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக டூரிஸ்ட் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர், சட்டென்று மினி கண்டெய்னர் லாரியை ஒட்டி தனது வாகனத்தை திருப்பியுள்ளார்.
மினி லாரி வந்துகொண்டிருந்த வேகத்திற்கு ப்ரேக் பிடிக்க முடியாமல், அந்த டூரிஸ்ட் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூரிஸ்ட் வாகனத்தில் வந்த அனைவரும் காயமடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். தகவலறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்துக்குள்ளானவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.