Advertisment

'விவசாயிகளின்  மனங்கள் இரணமாகி கொண்டிருக்கிறது'-பாமக ராமதாஸ் வேதனை 

'The minds of the farmers are becoming dull'-Pmk Ramdas

Advertisment

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வியர்வை சிந்தி சாகுபடி செய்த பயிர்கள் யாருக்கும் பயனின்றி அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது என பாமகநிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டத்திலும், அதையொட்டிய தூத்துக்குடி மாவட்டத்திலும் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், வெண்டைக்காய் சாகுபடியில் தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக நெல்லை சந்தையில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.2 என்ற மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த உழவர்கள் சந்தைக்கு கொண்டு வந்த பல்லாயிரம் கிலோ வெண்டைக்காய்களை சாலையில் கொட்டி அழித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நன்கு விளைந்த வெண்டைக்காய்களை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் கால்நடைகளை மேய விட்டு அழிக்கின்றனர்.

அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்பட்ட தக்காளிக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த தக்காளியை கிலோ ஒரு ரூபாய்க்கு கூட கொள்முதல் செய்ய ஆளில்லை. அதனால் விளைந்த வயலிலேயே தக்காளி புதைந்து உரமாகிக் கொண்டிருக்கிறது; விளைவித்த விவசாயிகளின் மனங்கள் இரணமாகிக் கொண்டிருக்கின்றன.

Advertisment

ஒரு ஏக்கரில் வெண்டைக்காய் சாகுபடி செய்வதற்கு சராசரியாக ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு அதிகபட்சமாக 6 டன்கள் வரை விளைச்சல் கிடைக்கும். வெண்டைக்காயை சந்தைக்கு கொண்டு செல்வதற்கும், மூட்டைகளை கையாள்வதற்கும் ஒரு கிலோவுக்கு ரூ. 2 வரை செலவாகும். அந்த வகையில் ஒரு கிலோ வெண்டைக்காய் 9 ரூபாய்க்கு விற்கப்பட்டால் தான் விவசாயிகள் நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும்; அதற்கும் கூடுதலாக விற்பனை செய்தால் தான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால், ஒரு கிலோ வெண்டைக்காய் 2 ரூபாய்க்கு விற்கப்பட்டால் உழவர்களால் போக்குவரத்து செலவை கூட ஈடு செய்ய முடியாது. தக்காளி சாகுபடியிலும் இதே நிலைமை தான். அதனால் தான் உழவர்கள் தக்காளி, வெண்டைக்காயை அறுவடை செய்யாமல் விட்டு விடுகின்றனர்.

சந்தைகளில் காய்கறிகளின் விலைகள் வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவது இப்போது தான் புதிதாக நடக்கும் நிகழ்வல்ல. ஆண்டுக்கு ஒருமுறையோ, ஈராண்டுக்கு ஒருமுறையோ காய்கறி கொள்முதல் விலைகள் வீழ்ச்சியடைந்து உழவர்கள் நஷ்டமடைகின்றனர். ஆனால், விவசாயிகளின் இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு தமிழகத்தை ஆட்சி செய்த அரசுகள் முயற்சி செய்யவில்லை.

இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு காய்கறிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்குவது தான். அனைத்து காய்கறிகளுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம் தான் காய்கறிகளை பயிரிடும் உழவர்களுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும்; அத்துடன்அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதற்கு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக உழவர்களுக்கு பயனளிக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.

அதே நேரத்தில் கேரள அரசு இத்திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது. கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20% லாபம் கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. கேரளம் செய்ததை தமிழகமும் செய்திருந்தால் உழவர்கள் விளைபொருட்களை சாலையில் கொட்ட வேண்டியிருந்திருக்காது. அத்துடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் வறட்சி, மழை, அதிக விளைச்சல், விளைச்சல் இல்லாமை என எந்த சிக்கலாக இருந்தாலும் பாதிக்கப்படும் ஒரே பிரிவினர் உழவர்கள் தான். அவர்களை அனைத்து பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. கொள்முதல் விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள் - பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடுதலாக வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Farmers pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe