வியாபாரியைக் கடத்தி குடும்பத்திடமிருந்து லட்சக் கணக்கில் பணம் பறிப்பு...

Millions of rupees extorted from family by kidnapping businessman in dindigul palani

தேங்காய் வியாபாரியை வழிமறித்து கடத்தி, குடும்பத்தினரிடமிருந்து ரூ.10 லட்சம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பாலசமுத்திரம் குரும்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. தேங்காய் வியாபாரியான இவர் நேற்று தேங்காய் குடோனுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் டூவீலரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது சண்முகநதி பைபாஸ் பகுதியில் வரும்போது காரில் வந்த கும்பல் ஒன்று வழி மறித்தது. அதைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய அவர்கள், மயில்சாமியிடம் முகவரி கேட்டுள்ளனர்.

அப்போது அந்த கும்பல் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரின் கண்களை துணியால் கட்டி அவரை காரில் கடத்தியுள்ளனர். அதன்பின் அந்தக் கும்பல், அவரிடம் உங்கள் குடும்பத்தினருக்கு ஃபோன் செய்து, ‘எனக்கு உடல்நிலை சரியில்லை,எனவே ரூ.10 லட்சத்தை நான் அனுப்பும் நபரிடம் கொடுத்து விடு’ என பேச வேண்டும் என்று சொல்லியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து வியாபாரியும் தனது மகனிடம் ஃபோனில் அவ்வாறே தெரிவித்துள்ளார். அதன்பின் அவரது வீட்டுக்கு ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த நபரிடம் மயில்சாமியின் மகன் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கும்பல் மயில்சாமியை விடுவித்தது.

இதுகுறித்து பழனி டவுன் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இப்படி வியாபாரியை மிரட்டி ரூ.10 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul district pazhani
இதையும் படியுங்கள்
Subscribe