
கோவையில் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் கோவை விமான நிலையம் வருகைதந்த தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவையில் நடைபெற உள்ள அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த பணிகளைப் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்க வருகைபுரிந்தார்.
இதில், திமுக மாநகா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் நா. காா்த்திக், மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா (எ) கிருஷ்ணன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி.ஆா். ராமச்சந்திரன், புறநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ். சேனாதிபதி, தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் மருத்துவா் வரதராஜன் ஆகியோா் கலந்துகொண்டனர்.
இவர்களின் ஒருங்கிணைப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் முதல்வரை விமான நிலையத்திலிருந்து வ.உ.சி. மைதானம் வரை 8 கிலோ மீட்டா் தூரம், 10 தொகுதிகளைச் சேர்ந்தவா்களுக்கு ஒரு பகுதி என ஒதுக்கப்பட்டு மேளதாளம் முழங்க முதல்வருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.