Mikjam storm damage; Department of School Education Core Instruction

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

அதே சமயம் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கடந்த 4 ஆம் தேதி முதல் (04.12.2023) இன்று (07.12.2023) வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (08.12.2023) அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Mikjam storm damage; Department of School Education Core Instruction

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளைத்திறக்கும் முன் செய்ய வேண்டிய வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளார். அதில், “நாளை (08.12.2023) முதல் பள்ளிகளுக்குச் சென்று உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தை முழுமையாகத்தூய்மைப்படுத்த வேண்டும். பள்ளி சுற்றுச்சுவர் அருகில் மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள உடைந்த பொருட்கள், கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும். மழையால் பள்ளி வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றைப் பூட்டி மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்” என 4 மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.