ADVERTISEMENT

கரோனா தடுப்பில் ஆசிரியர்களைப் பயன்படுத்த தடை விதிக்க முடியாது! -உயர் நீதிமன்றம்! 

04:10 PM Jul 13, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த தருணத்தில் ஆசிரியர்கள் ஒரு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனுவில், சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். ஆசிரியர்களுக்கு போதுமான வசதி செய்து தராமல், குறிப்பாக கவச உடை, மாஸ்க், கிருமி நாசினி, கழிப்பிட வசதி, தங்குமிட வசதி என எந்த ஒரு வசதியும் இல்லாமல், அவர்களைப் பணியில் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். ஆசிரியர் பணியை தவிர வேறு பணிக்கு பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடக்கோரி, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ‘ஆசிரியர்கள் களப்பணிக்கு அனுப்பப்படுவது இல்லை. தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களைக் கண்காணிக்கும் பணிகளைத்தான் மேற்கொள்கின்றனர். ஆசிரியர்கள் நேரடியாக களத்திற்கு செல்வதில்லை. அவர்கள், அலுவலக ரீதியான வேலைதான் பார்க்கின்றனர். மேலும், உரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஆசிரியர்களும் பொது ஊழியர்தான். அவர்களுக்கும் நாட்டின் மீது அக்கறை இருக்க வேண்டும். அவர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்.. தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பெண் காவலர்களும் பணிபுரிந்து வரும் நிலையில், ஆசிரியர்களும் இந்த தருணத்தில் பணிபுரிய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு உரிய பாதுகாப்பு வசதிகளைத் செய்து தந்துள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT