Advertisment

எம்.ஜி.ஆர். - மறைந்தும் மறையாதவர்!

mgr

Advertisment

எம்.ஜி.ஆரை பார்க்காத ஒரு புதிய தலைமுறை உருவாகி வாழ்ந்து வருகிறது. இன்றைக்கும் அவருடைய நினைவை, அவர் ஏற்படுத்திய தாக்கத்தை தவிர்க்க இயலவில்லை. அதற்கு எத்தனையோ காரிய காரணங்கள் இருக்கின்றன.

எம்.ஜி.ஆர். காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார். பின்னர் அண்ணாவை பார்த்த பிறகு அவரது கொள்கைகள், அவருடைய குடும்ப பாச உணர்வு போன்றவற்றால் கவரப்பட்டு, கலைவாணர், நடிகமணி டிவி நாராயணசாமி, டாக்டர் கலைஞர் ஆகியோரது நட்பால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார்.

20 ஆண்டுகள் திமுகவில் இருந்த அவர், பின்னர் அதிமுகவை தொடங்கினார். அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றார். அன்று திமுக, காங்கிரஸ் வலிமையாக இருந்தது. அதிமுக தொடங்கிய உடனேயே ஆட்சியை பிடிக்குமா? என்று அனைவரும் விமர்சித்தனர். 1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

Advertisment

சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது, பிள்ளைகளை தட்டு ஏந்த வைத்துவிட்டார், இதற்கு நிதி ஆதாரம் கிடையாது, புகழுக்காக, விளம்பரத்துக்காக இதனை செய்கிறார், கொஞ்ச நாள் போடுவார்கள், பிறகு படிப்படியாக நின்றுவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் சொன்னார்கள்.

ஆனால் அந்த திட்டம் இன்று வரை தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவது மட்டுமல்ல, கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் விரிவுப்படுத்தப்பட்டது. பல நாடுகள் அந்த திட்டத்தை பின்பற்றுகின்றன.

1960, 1970களில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும், இன்றைக்கு உள்ள நிலைமை அன்றைக்கு கிடையாது. ஒரு வேளை உணவு என்பது, அதுவும் அரிசி உணவு என்பது கனவாகவும், கேள்விக்குறியாகவும் நாட்டில் பல பகுதிகளில் இருந்தன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வருகிறார். வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்த மக்கள் அதிகம். இந்த திட்டத்தினால் பள்ளிகளில் பிள்ளைகளின் வருகைஅதிகரித்தது.

ஐந்து வயதை எட்டியபின்னரே குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். அதுவரை உணவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டத்தை கொண்டு வந்தார். அது இன்றும் தொடர்கிறது.

குறிப்பிட்ட பகுதி மக்களுக்கென தனித்தனியே நியாய விலைக்கடைகளை தொடங்கி வைத்தார். அதன் மூலம் பொது விநியோகத் திட்டத்தில் அரிசித் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்தார். அதன் மூலம் பல்வேறு மக்களும் பயன் பெற்றனர்.

தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளை அவர் திறந்தார். அப்போது, ''நான் இருக்கிறேனோ, இல்லையோ நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகம் உயர்கல்வியில் சிறந்து முன்னணியில் இருக்கும். சிறந்து விளங்கும். உலக நாடுகளில் நமது பிள்ளைகள் மருத்துவத்தில், பொறியியல் துறையில், தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவார்கள். பல்வேறு நாடுகளுக்கு செல்வார்கள். அவர் சொன்னப்படியே நடந்தது. அதனை புள்ளி விவரங்கள் சொல்லும்.

எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும் இன்றும் அவரது பெயரை வைத்துத்தான் பல்வேறு அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe