mettur dam water opening for cauvery delta region cm mk stalin

சேலத்தில் கலைஞர் சிலை திறப்பு மற்றும் அவருடைய நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்க விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 11 ஆம் தேதி சேலம் வருகிறார்.

Advertisment

இது தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வரலாற்றில் முத்திரைச் சாதனைகள் பல படைத்தது சேலம் மாவட்டம். சேலத்திற்கு இரும்பாலை, ரயில்வே கோட்டம், அரசு மருத்துவக் கல்லூரி, மாநகராட்சிக்காக 283 கோடி ரூபாயில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், 183 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டம், 136 கோடி ரூபாயில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஏத்தாப்பூரில் மரவள்ளிக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம், ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா, ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர். அவரைப் போலவே, சேலம் மாவட்ட வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த அரசு விழாவில் 1242 கோடி ரூபாயில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஜூன் 11 ஆம் தேதி, சேலம் மாநகருக்கு வருகை தரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவச் சிலையைத் திறந்து வைப்பதுடன், அவருடைய நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைத்தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். ஜூன் 12 ஆம் தேதி, காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்காக சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கிடுவோம். இது தொடர்பாக ஆலோசிக்க, மே 30 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு, சேலம் 5 சாலை ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் என் தலைமையில் நடத்தப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்" என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.