Skip to main content

வரலாற்றில் முதன்முறையாக மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை! 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Mettur Dam opens prematurely!

 

குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12- ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24- ஆம் தேதி திறந்து விடப்படுகிறது. 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12- ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது.

 

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி,மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும் நீர் இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12- க்கு முன்பாகவே, 24/05/2022 முதல் நீரைத் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளாகிய ஜூன் 12- ஆம் நாள் அல்லது அதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது இரண்டாவது முறையாகும். இது மட்டுமன்றி, மே மாதத்தில் இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

 

மேலும், நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, 23/04/2022 முதல் துவங்கப்பட்டு, ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் 31/05/2022க்குள் முடிவடையும். இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, முழுமையாக டெல்டா பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அடைய ஏதுவாகும்.

 

இவ்வாறு, மிக முன்னதாக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவதால், காவிரி டெல்டா விவசாயிகள் அதிக பரப்பளவில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவும், சம்பா பயிருக்கான பணிகளை முன்னதாகவே தொடங்கி செயல்படுத்தவும் இயலும். வெள்ளக்காலங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்காது காக்கவும், இந்த நடவடிக்கை உதவும். இது மட்டுமன்றி, தொடர்ந்து நீண்டகாலத்திற்கு நீர் கிடைக்கப் பெறுவதால் டெல்டா பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உயர்வதற்கும் இது வழிவகுக்கும்.

 

இந்நிலையில், குறுவை சாகுபடிப் பணிகளுக்கான விவசாய இடுபொருட்களும், வேளாண் கடன்களும் அனைத்துப் பகுதிகளிலும், வேளாண் பெருமக்களுக்கு தடையின்றி நடவடிக்கைகளையும், மாவட்ட கிடைத்திடத் தேவையான அனைத்து உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசுத்துறைகளுக்கும், ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். நீரை முறையாகப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து இந்த ஆண்டும் நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வளம் பெருகிட வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.