Skip to main content

மேட்டூர் அணை திறப்பு! 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்!!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இன்று (ஆக. 8) தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார். இதன்மூலம் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் மற்றும் கேரளாவில் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், இரு மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளும் நிரம்பி உள்ளன. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையின் முழு நீர்த்தேக்க அளவான 124.80 அடி உயரத்தை எட்டி நிரம்பியது. இதையடுத்து, கேஆர்எஸ் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 4200 கன அடி வீதம் வரும் தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.

 

 Mettur Dam opened today! 16 lakh acres of agricultural land will be Benefited!!


அதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2284.80 அடி உயரத்தில் உள்ள கபினி அணையும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி அந்த அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் இரு முக்கிய அணைகளில் இருந்தும் 2 லட்சத்து 39200 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று இரவு (ஆக. 12) 2.40 லட்சம் கன அடியாக அதிகரித்தது. தொடர் நீர் வரத்து காரணமாக கடந்த 9ம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 54 அடியாக இருந்த நிலையில், நான்கு நாள்களில் மட்டும் மேலும் 40 அடி உயர்ந்தது. நீர் வரத்து அதிகரித்து வருவதால், விரைவில் அணையின் முழு நீர்த்தேக்க அளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்று, ஆகஸ்ட் 13ம் தேதியன்று (இன்று) மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்தது. முன்னதாக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையில் சிறப்பு பூஜைகள் செய்ததுடன், தண்ணீரில் மலர்களைத் தூவியும் வழிபட்டனர். 

இன்று அதிகாலை 4.30 மணியளவில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100.03 அடியை எட்டியது. அணையின் முழு நீர் கொள்ளளவு 93.47 டிஎம்சி. தற்போதைய நீர் இருப்பு 63.144 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு தற்போது 2 லட்சத்து 58582 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசன வசதிக்காக முதல்கட்டமாக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பின் மூலம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 


மேட்டூர் அணை கட்டியதில் இருந்து இதுவரை 65வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

விழாவில், மேட்டூர் அணையைத் திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பேசியது:

 

 Mettur Dam opened today! 16 lakh acres of agricultural land will be Benefited!!

 

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் அணையின் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கிறேன். ஏழுமலையான், ஜெயலலிதா ஆகியோரின் அருளாசியுடன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை திறப்பின் மூலம் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 

மேற்கு, கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 137 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அவற்றின் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் தயார் நிலையில் உள்ளன. தேவையான நேரத்தில் அவை வழங்கப்படும். மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 85 ஆண்டுகள் ஆன நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை ஏற்கனவே துவக்கி வைத்தேன். இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 2.70 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் எடுத்து பயன் அடைந்துள்ளனர். 

காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரப்பப்படும். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.