Skip to main content

“குறுவை சாகுபடிக்கு ஜுன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும்” -காவிரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

Published on 17/05/2020 | Edited on 17/05/2020
ravindran



காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

 

 

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.ரவிந்திரன் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

பழமையும், பெருமையும், பாரம்பரியமும் கொண்ட தமிழக காவிரி பாசன படுகையில் மூன்று போக சாகுபடி நடைபெற்று வந்தது. தமிழக மக்களின் முழுமையான உணவு தேவைக்கு வேளாண் விளைபொருள்களில் பிரதானமாக அரிசியே முதன்மையாக விளங்குகிறது.  மாநிலத்தின் 68 சதவிகித  அரிசி தேவையை காவிரி பாசன பகுதி முழுமையாக பூர்த்தி செய்து தன்னிறைவை அடையச் செய்கிறது.  தேவைக்கு ஏற்ப தண்ணீரை வழங்கிய காவிரி ஆறும், பருவ மழையும்  காவிரி பாசன பகுதியை முப்போகம் விளையும் பசுமை பூமியாக பாதுகாத்து வந்தது. இந்த காலக்கட்டத்தில்  முதல்போகம் குறுவையும், இரண்டாம் போகம் சம்பாவும், முன்றாம் போகம் கடைமடை பாசன பகுதிகளில் நவரையும், மற்ற பெரும்பாலான பகுதிகளில்  ஊடுபயிராக உளுந்து மற்றும் பச்சை பயிறு சாகுபடியும் ஏகபோகமாக நடந்து வந்தது.
 

தமிழக காவிரி பாசன பகுதியை பொறுத்த மட்டில் சாகுபடிக்கு வழக்கமாக ஜுன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருக்கும்  தண்ணீரை திறந்து சாகுபடி பணிகள்  தொடங்கி நடைபெறும். அதனை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை துவங்கி கர்நாடக மாநில அணைகள் நிரம்பி வெளியேற்றப்படும்  உபரி  நீரும்,  கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கபினி அணையின் வழியாக காவிரி ஆற்றின் மூலம்  மேட்டுர் அணை வந்தடைந்து சாகுபடிக்கு  தேவையான தண்ணீரை  திறந்து  வினியோகிக்கப்படுவது வழக்கம். கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில்  பெய்யும் அபரிதமான மழையால்  மேட்டூர் அணைக்கு வரும் நீர் முறையாக சேமிக்கப்பட்டு குறுவை சாகுபடியை நிறைவு செய்து பின்னர் சம்பா சாகுபடியின் ஆரம்பகால பணிகள் தொய்வின்றி நடைபெற உதவிகரமாக இருக்கும்.
 

சம்பா நடவுப்பணி தொடங்கும் காலத்தில் வடகிழக்குப்பருவ மழை தொடங்கி முழுவீச்சில் சம்பா சாகுபடி நடை பெற்று அறுவடை நேரத்தில் தேவைக்கு ஏற்ப மீண்டும் மேட்டூர் அணை மூலம் வினியோகிக்கப்படும்  தண்ணீரைக்கொண்டு சம்பா சாகுபடியை முடித்து மனநிறைவோடு அறுவடை செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. முப்போக சாகுபடியும் தொய்வின்றி நடைபெறும் வகையில் தண்ணீர் வினியோகம் சீராக நடைபெற இயற்கை சிறப்பாக இயங்கியது.
 

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பருவமழை தாமதமாக துவங்குவதும், குறைந்த கால அளவில் இயல்பான  மழை பெய்வதும், மற்றும் மாநிலங்களுக்கிடையே நிலவி வரும் நதிநீர் பங்கீட்டு பிரச்சனையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு  முப்போக சாகுபடி இருபோகமாகவும், இருபோக சாகுபடி ஒருபோகமாகவும், சில ஆண்டுகளில் ஒருபோக சாகுபடிகே உத்தரவாதம் இல்லாத நிலையில்  விவசாயம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து  விவசாயிகள் உரிய வருவாய் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

ஆண்டு தோறும் மேட்டூர் அணையில்  குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் எதிர்கால தென்மேற்கு பருவ மழை துவங்கும் காலத்தை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலை மாறி தென்மேற்கு பருவ மழை துவங்கி  அணை நிரம்பிய பிறகே திறக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.  இதனால் தண்ணீர் திறந்த பிறகே சாகுபடி என்ற நிலை உருவாகிவிட்டது.
 

ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கும் ஆண்டுகளில் காவிரி பாசன மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் அளவிற்கு   குறுவை சாகுபடி நடைபெற்று வந்தது. மேட்டூர் அணை முழுமையாக நிரம்பிய பிறகே தண்ணீர் திறக்கும் நடைமுறை வந்ததால்  குறுவை சாகுபடி   படிப்படியாக குறைந்தது. போர்வெல் வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டது.  நாளடைவில் போதிய மழை இல்லாததால் மழை நீர் செறிவூட்டல் நிகழாமல் நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்து சுமார் ஒரு லட்சம் ஏக்கர் அளவிற்கும் குறைவாக குறுவை சாகுபடி செய்யும் நிலை வந்தது.
 

ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு  மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் நடைமுறை 1934 ஆம் ஆண்டு  தொடங்கி கடந்த 2019 ஆம் ஆண்டு வரை 86 ஆண்டுகளாகிறது. இதில் சாகுபடிக்கு   திறக்க நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12 ஆம் தேதிக்கும் முன்னரே  பல முறை மேட்டூர் அணை திறந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்ட நிகழ்வுகள் உண்டு. அதற்கு காரணம் தென்மேற்கு பருவ மழை  தொடங்கி அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரால்  அணை நிரம்புவதை  பொறுத்து மேட்டூர் அணை  திறக்கப்பட்டு வந்தது.
 

கடந்த 20 ஆண்டுகளில் 2000, 2001, 2006, 2008 ஆகிய  4 ஆண்டுகளில்  மட்டுமே ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 2011 ஆண்டு மேட்டூர் அணை முன் கூட்டியே நிரம்பியதால் ஜூன் மாதம் 6 ஆம் தேதி திறக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளில் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. 2011 ஆண்டு 1.75 லட்சம் ஏக்கர் அளவிற்கு நடைபெற்ற குறுவை சாகுபடி  2012 ஆம் ஆண்டு சுமார் 1.25 லட்சம்  ஏக்கர் அளவாக குறைந்து   2013 ஆம் ஆண்டு ஆழ்துளை குழாய் அமைத்த விவசாயிகள் மட்டும் நிலத்தடி நீரைக்கொண்டு 75 ஆயிரம் ஏக்கர் அளவிற்கே குறுவை சாகுபடி செய்து வந்தனர். அதற்கு பின்  ஆண்டுகளிலும் குறைவான அளவே சாகுபடி செய்யப்பட்டது. குறிப்பாக  ஆழ்துளை குழாய் மூலம் தஞ்சை, திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை, கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, ஆகிய அனைத்து   மாவட்டங்களிலும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஏக்கர் அளவிற்கே குறுவை சாகுபடி செய்யப்படும்.  
 

 

 

தற்போதைய  நிலையில்  உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு  தண்ணீரை பாசனத்திற்கு வினியோகித்தால் விவசாயிகள் கூடுதலாக குறுவை சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. மேலும்  நடப்பாண்டில்  தென்மேற்கு பருவமழை  முன்கூட்டியே துவங்கும் என்றும் தொடர்ந்து நடப்பாண்டு ஆண்டு சராசரி அளவிற்கு இயல்பான மழைபொழிவு  இருக்கும் என நம்பிக்கை அளிக்கக்கூடிய தகவலை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் உறுதிபடுத்தியள்ளது.
 

தற்போது  மேட்டூர் அணையில் தண்ணீர் 100.07 அடியாக உள்ளது.  டி.எம்.சி அளவுகோளில் 64.931 டி.எம்.சி தண்ணீர் உள்ளது.  குறுவை சாகுபடி தேவைக்குறிய தண்ணீர் கைவசம் இருப்பதால் குறுவை சாகுபடியை நிறைவு செய்ய முடியும். விரைவில் தொடங்க இருக்கும் பருவமழையின்  மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி குறுவையை  முடித்து தொடர்ந்து சம்பா சாகுபடியை உரிய காலத்தில் துவக்கி, அறுவடைக்கு பின்  பயிறு வகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யும்  வாய்ப்பை  உருவாக்க முடியும்.
 

மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்ட  பல ஆண்டுகளில் பெரும்பாலான காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்த செலவில் அதிகம் லாபம் தரக்கூடிய  பயிறுவகைகளை சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.  உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் சம்பா அறுவடைக்கு பின் பயிறுவகை சாகுபடியை ஏகபோகமாக கடைமடை பாசன மாவட்டங்களிலும்  12  ஆண்டுகளுக்கு  பிறகு நடப்பாண்டில் முழுமையாக செயல்படுத்தும் வாய்ப்பை விவசாயிகளுக்கு தமிழக அரசு உருவாக்கி கொடுக்க முடியும்.
 

2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19 ஆம் தேதியும், 2019 ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதியும் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் தென்மேற்கு பருவமழை  துவங்கி அபரிதமான மழை பொழிவால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர்  அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலை ஆதரங்களை நிரப்பிய பிறகும்  2018 ஆண்டு வினாடிக்கு வினாடிக்கு  2.22 லட்சம் கன அடி தண்ணீரும், 2019 ஆம் ஆண்டு வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்னீரும் உபரியாக கடலில் கலந்தது. அது மட்டுமல்லாமல்  கடந்து ஆண்டு துவக்கம் முதல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து சீராக தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.

 

நம

குறுவை சாகுபடியை முழுமையாகவும், முறையாகவும் செய்தால் தான் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்லுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். கடந்த பல ஆண்டுகளில் குறுவை சாகுபடி குறைந்த அளவே செய்ததால் சம்பா சாகுபடிக்கு பல அனுபவம் இல்லாத வியாபாரிகள்  அரசு அங்கீகாரம் ஏதும் இல்லாமல் விதை விற்பனையாளர்களாக உருவெடுத்து தரமற்ற விதைகளை விற்பனை செய்து பல விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட செய்தனர். மேலும் பல கார்பரேட் நிறுவனங்கள்   கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடித்தனர்.
 

எனவே  விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை தடுத்து, தாராளமாக விதைகள் கிடைக்கவும், பருவமழையால் கிடைக்கும் தண்ணீரை  முழுமையாக பயன்படுத்தவும், 9 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பா சாகுபடியை மீண்டும் முழு வீச்சில் விவசாயிகள் துவக்கவும் ஏதுவாக தமிழக அரசு தற்போது நிலவும்  சாதகமான சூழலை பயன்படுத்தி  எதிர் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி பாசன விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடகா அரசு திட்டவட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Karnataka government planed Can't release water to Tamil Nadu

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.