Skip to main content

மேட்டூர் வனக் காப்பாளர் பணியிடை நீக்கம்; மரக்கடத்தல் லாரி ஓட்டுநர்களிடம் மாமூல் வசூல் புகார்!      

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Mettur Conservator dismissed on bribery complaint

 

மேட்டூர் அருகே மரங்கள், கற்கள் கடத்திச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மாமூல் வசூலித்ததாக வந்த புகாரின் பேரில் வனக் காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேட்டூர் வனச்சரகத்தில் பிரான்சிஸ் என்பவர் வனக் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது, கொளத்தூர் வனத்துறை சோதனைச் சாவடியில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.     

 

இவர் மீது, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அடிக்கடி புகார்கள் சென்றன. அதன் பேரில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு திடீரென்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கொளத்தூர் சோதனைச் சாவடி வழியாக கர்நாடகா மாநிலத்திற்குச் செல்லும் வாகனங்கள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து மேட்டூர் வழியாகச் செல்லும் வாகனங்களில் அனுமதியின்றி மரங்கள், உளி கற்கள் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மாமூல் வசூலிப்பதாக பிரான்சிஸ் மீது புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரில் முகாந்திரம் இருந்ததன் பேரில்தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேட்டூர் அருகே இருதரப்பினர் மோதல்; போலீஸ் குவிப்பு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Clash between two sides near Mettur; police presence

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் காவேரிபுரம் என்ற பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இஸ்லாமியர்கள் தகன பூமி ஒன்று உள்ளது. இந்த நிலப்பரப்பிற்கு அருகே பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பலர் வசித்து வரும் நிலையில், தங்கள் குடியிருப்பு அருகே உடல்களை அடக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கு சடலம் ஒன்று புதைப்பதற்காக எடுத்து வரப்பட்ட நிலையில், அதைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். மேலும் அந்த பகுதி மக்கள் உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கேட்டு சாலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 22 லட்சம் மோசடி; 5 பேர் மீது வழக்குப்பதிவு!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Claiming to buy a job Rs. 22 lakh  Case against 5 people

பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் வேலை கிடைத்துள்ளதாக போலி பணி நியமன ஆணை வழங்கி இளைஞரிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் புது காலனியைச் சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மகன் மகாதேவ் (வயது 26). பொறியியல் பட்டதாரியான இவர், சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்பி அருண்கபிலனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “நான் அரசுப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதி வந்தேன். இந்த சூழலில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேட்டூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் அறிமுகம் ஆனார். அவர் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்றுக் கொடுப்பதாகவும், பொதுப்பணித்துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, 30 லட்சம் ரூபாய் கேட்டார். அதன்பேரில் பழனிசாமி, அவருடைய நண்பர்கள் சந்தோஷ் பாண்டி, நித்தியானந்தம் ஆகியோரிடம் 22 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.

இதையடுத்து அவர்கள் எனக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் பணி கிடைத்துள்ளதாகக்கூறி, ஒரு பணி நியமன ஆணை கடிதத்தை வழங்கினர். அந்த பணி நியமன ஆணை கடிதத்தை வாங்கிப் பார்த்தபோது அது போலியானது எனத் தெரிய வந்தது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடும்படி கேட்டேன். ஆனால் பணத்தைத் தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், என்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும்” எனத்  தனது  புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தப் புகார் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டக் குற்றப்பிரிவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பழனிசாமி, கூட்டாளிகள் கந்தபாலன், நித்தியானந்தம், சந்தோஷ்பாண்டி, சுமதி ஆகிய 5 பேரும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் ஐந்து பேர் மீதும் கூட்டுச்சதி, பண மோசடி, போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.