/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tamil_2.jpg)
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 869 கன அடியாக சரிந்துள்ள நிலையில், நீர்மட்டம் 91.90 அடியாக குறைந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம், டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, பாசனத்திற்காக பதினாறு கண் மதகு வழியாக நீர் திறக்கப்பட்டது. கடல் போல் காட்சி அளித்த பதினாறு கண் மதகு பகுதிகள் இப்போது பாறைகளாக காட்சி தருகின்றன.
நேற்று (டிசம்பர் 22, 2018) அணைக்கு வினாடிக்கு 908 கனஅடியாக இருந்த நீர் வரத்து, இன்று (டிசம்பர் 23, 2018) காலை நிலவரப்படி, 869 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 16500 கனஅடியில் இருந்து 12500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு&மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தைக் காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று (சனிக்கிழமை) 93.09 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 91.90 அடியாக சரிந்தது. அணையில் நீர் இருப்பு 54.84 டிஎம்சி ஆக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)