Skip to main content

மெட்ரோ வாட்டர் பணி நியமன மோசடி!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

 


சமீபத்தில் வழங்கப்பட்ட மெட்ரோ வாட்டர் பணிநியமனத்தில் மாபெரும் மோசடி நடந்துள்ளது. ஆனால், உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் இதுகுறித்து நாம் விசாரிக்க ஆரம்பித்தோம்.

 

ப்

 

டெபுடி கண்ட்ரோலர் ஆஃப் ஃபைனான்ஸ்-6, சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆஃபிஸர் –3, அசிஸ்டெண்ட் எஞ்சினியர் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல்) -158,  ஜூனியர் அசிஸ்டெண்ட்- 155 என கடந்த 2017 பிப்ரவரி-4 ந்தேதி 355 காலிப்பணியிடங்களுக்கு விளம்பரம் அறிவித்தது சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு வாரியம். இதில், 2017 மார்ச்-6 ந்தேதி ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்காக விண்ணப்பித்தார் சென்னை திருவள்ளூரைச்சேர்ந்த சத்யலட்சுமி.

 

2017 செப்டம்பர்-23 ந்தேதி இதற்கான தேர்வை  ஸ்ரீபெரும்பத்தூரிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் எழுதினார். சென்னை, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய ஐந்து இடங்களில் தேர்வு நடந்தது. சுமார், 5,000 -த்துக்குமேற்பட்டோர் தேர்வு எழுதினார்கள். 2017 நவம்பர்-17 ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கல்லூரியில் எடுத்த மதிப்பெண்களையும் தேர்வு எழுதிய மதிப்பெண்கள் அடிப்படையிலும் தேர்ந்தெடுத்து பட்டியிலிட்டிருந்தார்கள். 474 பேர் ஜூனியர் அசிஸ்டெண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஃபேஸ்-1, 2, 3 என  158 பேராக  2017 டிசம்பர்-7 ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில், ஃபேஸ்-1 ல் சத்யலட்சுமி 37-வது இடத்தில் இருந்தார்.

 

ஒருவருடத்துக்குப்பின் 2018 டிசம்பர்-24 ந்தேதி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். 360 பேரை ஆறுநாட்களுக்கு வரவழைத்து நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். அயனாவரத்திலுள்ள மெட்ரோ வாட்டர் ட்ரெயினிங் செண்டர் இதனை நடத்தியது. நேர்முகத்தேர்வில் 38-வது இடத்தை பிடித்தார் சத்யாலட்சுமி. அதற்குப்பிறகு என்ன நடந்தது? பணிநியமனத்தில் மோசடி நடந்துள்ளது என சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சத்யாலட்சுமியின் கணவர் பாபு நம்மிடம், “ரெண்டுமாசம் கழித்து தொடர்ந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கிட்டே இருந்தோம். தேர்வு அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த ரெஸ்பான்ஸும் இல்ல. 2019 மார்ச்-1 ந்தேதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 11 மணிக்கு 044-28451300 என்ற மெட்ரோ வாட்டர் எண்ணுக்கு தொடர்புகொண்டு அட்மினிஸ்ட்ரேஷன் பிரிவில் கேட்டபோது அப்ளிகேஷன் நம்பரை கேட்டாங்க. இந்த, எண்ணிற்கானவர் தேர்ச்சிபெறவில்லை. வரும்-4 ந்தேதிதான் போஸ்டிங் போடப்போகிறோம்னு சொல்லி அதிர்ச்சியூட்டினார்.

பாபு

ப்

 

‘அதிகாரப்பூர்வமா ரிசல்ட்டே வராம எப்படி பணிநியமனம் செய்றீங்க?’ன்னு  நான் கேட்டபோது  ‘உயரதிகாரிகளின் உத்தரவு’ என்று அலட்சியமாக சொல்லிவிட்டார்கள். பிறகு, நேரடியாக சென்று பர்சனல் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலரை பார்த்து கேட்டபோது ஃபோனில் சொன்ன அதே பதிலை நேரிலும் கூறினார். ‘தேர்வின்போது ஒவ்வொருக்கட்டத்தையும் இணையதளத்தில் முன்கூட்டியே வெளிப்படையாக தெரிவிச்சீங்க. இறுதித்தேர்ச்சிப்பட்டியலை மட்டும் இணையதளத்தில் வெளிப்படையா அறிவிக்காதது ஏன்? சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தொலைபேசியில் தகவல் கொடுத்து  பணிநியமனம் வழங்குவது சரியா? என்று கேள்வி கேட்டு மெட்ரோ வாட்டர் மேலாண்மை நிர்வாகத்திடம் புகார் கொடுத்தேன்.

 

ஆனால், சென்னை எம்.ஆர்.சி. ஹாலில் 2019 மார்ச்- 3 ந்தேதி காலை-8 மணிக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மூலம் பணிநியமனத்தை வழங்கிவிட்டார்கள். பணிநியமனம் வழங்கியபிறகு மாலை-5 ந்தேதிதான் இறுதிப்பட்டியலையே இணையதளத்தில் வெளியிட்டார்கள். அப்போதுகூட, தேர்வு எழுதிய கட்-ஆஃப் மதிப்பெண்ணை வெளியிடவில்லை.

 

தகவல் உரிமைச்சட்டம்-2005 கீழ் 2019 மார்ச்-15 ந்தேதி  அன்று ஆர்.டி.ஐ.யில் கேட்டபோது, ஏப்ரல்-4 ந்தேதி கட்-ஆப் மதிப்பெண்களை தெரிவித்துவிட்டு பிறகு இணையத்தில் வெளியிட்டார்கள். மேலும், டி.என்.பி.எஸ்.சி. ரோஸ்டரை ஃபாலோ-அப் செய்து இணையதளத்தில் வெளியிட்டதாக சொல்கிறார்கள். ஆரம்பத்தில், கல்லூரி மதிப்பெண்ணும் தேர்வு மதிப்பெண்ணும் வைத்துதான் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், இறுதியில் டி.என்.பி.எஸ்.சி. ரோஸ்டர்படி ஃபாலோ-அப்தான் செய்தோம் என்கிறார்கள். ஆரம்பத்திலேயே டி.என்.பி.எஸ்.சி. ரோஸ்டர்படி தேர்வு நடத்தப்படாதது ஏன்? அப்படியென்றால், பணம் கொடுத்தவர்களுக்கும் தங்களுக்கு  வேண்டப்பட்டவர்களுக்கும் பணி நியமனத்தை வழங்குவதற்காக இப்படி மாற்றிப்பேசுகிறார்களா? என்று குழப்பமாக உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளியான எனது மனைவிக்கு கிடைக்கவேண்டிய அரசுப்பணி பறிபோய்விட்டது. இதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறேன்” என்கிறார் வேதனையோடு.

 

குற்றச்சாட்டு குறித்து மெட்ரோ வாட்டர் போர்டு இயக்குனர் ஹரிகரன் ஐ.ஏ.எஸ்ஸை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது,  “நான் பணிநியமனத்தின்போதுதான் இப்பதவிக்கே வந்தேன். இதில், என்ன நடந்தது என்பது பொதுமேலாளர் கோவிந்தராஜுளுவிடம் கேளுங்கள்” என்றார். நாம், அவரிடம் விளக்கம் கேட்டதற்கு சொல்ல மறுத்துவிட்டார்.    

 

அமைச்சர் முன்னிலையில் நடந்த பணிநியமனத்தில் என்ன நடந்தது? என்பதை ஆராயவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இப்படி, முறைகேடாக பதவியை பிடிப்பவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்வார்கள்? மக்களிடம் லஞ்சம் வாங்கத்தானே செய்வார்கள்?

-மனோசெளந்தர்

சார்ந்த செய்திகள்