Skip to main content

மெட்ரோ ரயில் நிலையங்களைத் தாமதமாக கட்டிக்கொடுத்த விவகாரம்! -வங்கி உத்தரவாதத்திலிருந்து ரூ.143 கோடி வசூலிக்க தடையில்லை!

Published on 16/08/2020 | Edited on 17/08/2020
chennai high court

 

 

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களைத் தாமதமாக கட்டிக் கொடுத்த நிறுவனங்களிடம் இருந்து  ரூ.143 கோடியை வசூலிக்க,  மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

 

சென்னையில், ஷெனாய் நகர், அண்ணாநகர், திருமங்கலம், வண்ணாரப்பேட்டை, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில், மெட்ரோ ரயில்  நிலையங்கள் கட்ட 2,596 கோடி ரூபாய்க்கு மும்பை மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களுடன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது.

 

ஒப்பந்தத்தில் கூறியபடி, குறித்த காலத்தில் பணிகளை முடிக்காமல், 3 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தியதாகவும், பணிகளை அரைகுறையாக பாதியில் விட்டுள்ளதாகவும் கூறி, இந்த நிறுவனங்கள் அளித்த வங்கி உத்தரவாதத்தில் இருந்து ரூ.143 கோடியே 28 லட்சத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து மும்பை மற்றும் ரஷ்யா நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வங்கி உத்தரவாதத்தில் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்து, மும்பை மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக, இந்த உத்தரவை ஆகஸ்ட் 21 வரை நிறுத்தி வைத்த நீதிபதி,  அதற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், வங்கி உத்தரவாதத்தின்படி, மெட்ரோ ரயில் நிர்வாகம் வங்கியில் இருந்து பணம் எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.