ADVERTISEMENT

போதைக்காக மெத்தனால் அருந்திய மேலும் இருவர் பலி! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு !

04:29 PM Apr 15, 2020 | kalaimohan

கடலூர் அருகேயுள்ள ஆலப்பாக்கம் காலனியை சேர்ந்த சந்திரகாசு (55) என்பவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதன் காரணமாக, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த எழில்வாணன் (35), மாயகிருஷ்ணன்(42) ஆகியோரும் அதேபோல் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

ADVERTISEMENT


மேலும் ஆணையம்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜ்(42) என்பவரும் இதேபோல் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT


சந்திரகாசன் திடீரென நெஞ்சு எரிச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது மற்றும் மற்றவர்கள் அடுத்தடுத்து இதேபோல் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததையடுத்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், ஆணையம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் குமரேசன்(28) என்பவர் கடலூர் அடுத்துள்ள சிப்காட்டில் பூச்சிக்கொல்லி தயாரிக்கப்படும் தனியார் மருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலையிலிருந்து ஒரு லிட்டர் மெத்தனாலை தனது கிராமத்திற்கு எடுத்து வந்துள்ளார். சுந்தரராஜ் அதை போதை வஸ்துவாக பயன்படுத்தும் நோக்கத்தில் அதனுடன் தண்ணீரை கலந்து சந்திரகாசு, எழில்வாணன் ஆகியோருடன் சேர்ந்து குமரேசனும் போதைக்காக அருந்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால்தான் நேற்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்திரகாசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாயகிருஷ்ணன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுந்தரராஜன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தனர். மேலும் எழில்வாணன் என்பவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டதன்பேரில், நேற்று இரவு கலால் துறை ஆணையர் விஜயராகவன், கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி ஸ்ரீதரன், தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் அந்த தொழிற்சாலைக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர். போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT