Skip to main content

‘24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி’ - வானிலை ஆய்வு மையம்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Meteorological Centre notification Low pressure area in 24 hours

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வலுவான வடகிழக்கு காற்று மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மழைக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஏற்கனவே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாட்டில் நேற்று (28-12-23) ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருந்ததாகவும் அதேபோல், இன்று (29-12-23) கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தது. 

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, ‘இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்