Meteorological Center warns Chance of very heavy rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (20.11.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (20.11.2024) மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கசெல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.