Met Dept Warning Heavy Rain likely

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்து என்ற 54 சென்டிமீட்டர் மழையும், அம்பாசமுத்திரம் மற்றும் கோவில்பட்டியில் தலா 37 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

நேற்று (12.12.2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (13.12.2024) லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும். நாளை (14.12.2024) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

எனவே இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (14.12.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (15.12.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisment

16ஆம் தேதி (16.12.2024) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர். கள்ளக்குறிச்சி புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 18ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர். விழுப்புரம், அரியலூர். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.