Met Dept says Rainfall higher than normal has been recorded during the summer

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், தென்மேற்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா (31.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த 3 மாதங்களில் (மார்ச் முதல் மே மாதம் வரையில்) தமிழகத்தில் பதிவான மழை அளவு 25 செ.மீ. ஆகும். இயல்பு நிலை 13 செ.மீ. ஆகும். எனவே இது இயல்பை விட 97 விழுக்காடு அதிகமாகக் கோடை பருவ காலத்தில் மழை அளவு பதிவாகியுள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் இந்த காலத்தில் பெய்த மழை அளவு 245.6 மி.மி. ஆகும். இயல்பு மழை அளவு 124.9 மி.மீ. ஆகும். இது இயல்பை விட 97% அதிகம். சென்னை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பதிவான மழை அளவு 12 செ.மீ. ஆகும். இயல்பு மழை அளவு 5 செ.மீ. ஆகும். எனவே இது இயல்பை விட 129 சதவீதம் அதிகம் ஆகும். மாவட்ட வாரியாக பார்த்தால் இயல்பை விட மிக அதிகமான மழைப்பொழிவு என்பது 29 மாவட்டங்களிலும், இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு என்பது 11 மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்குக் கடந்த 8 நாட்களாக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை பொறுத்தவரையில் அதாவது கடந்த 23ஆம் தேதி 08.30 மணியிலிருந்து 31ஆம் தேதி 08.30 மணி வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலஞ்சியில 141 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாகக் கோயம்புத்தூர் மாவட்டம் சின்ன கல்லார் என்ற இடத்தில் 101 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

Advertisment

இந்த 3 மாதங்களில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் இடத்தில் 16 நாட்கள் 40 டிகிரி தாண்டி பதிவாகியுள்ளது. அடுத்தது கரூர் பரமத்தியில் 10 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் மே 15ஆம் தேதி 41.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வேலூரில் மே 4 மற்றும் 7 ஆம் தேதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் மே 13 மற்றும் 14ஆம் தேதி 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரைக்கும் இந்த 3 மாத இடைவெளியில் ஒரு நாள் கூட 40 டிகிரியை வெப்பம் தொடவில்லை. அதே சமயம் மே 4மற்றும் 5ஆம் தேதிகளில் 39.66 டிகிரி செல்சியஸ் பதிவாயிருந்தது. தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் மே 26ஆம் தேதியே பரவி மற்ற பாகங்களுக்கு ஊடுருவி இருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி தென்மேற்கு பருவமழையின் பருவ காலம் என்பது ஜூன் 1ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 வரைக்குமான 4 மாத காலங்கள் தான்” எனத் தெரிவித்துள்ளார்.