Met Dept  report for A low pressure area in the Arabian Sea

Advertisment

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (24.05.2025) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. ரத்னகிரிக்கு வடமேற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டது.

மேலும் இது ரத்தினகிரி - டாபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் இன்று மதியத்திற்குப் பிறகு கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. அதோடு தமிழகத்தின் கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மதியம் 01:00 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. முன்னதாக நாளை (25.05.2025) மற்றும் நாளை மறுநாள் (26.05.2025) கோவை மற்றும் நீலகிரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்குப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனப் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு தலா ஒரு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலோ அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களுக்கோ பேரிடர் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.