“காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்” - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

 Met Dept forecast A low pressure area may form

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (21.05.2025) நண்பகல் 01.15 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையைப் பொறுத்த வரையில் தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 3 முதல் 4 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.

வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை 08.30 மணி அளவில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அதற்கடுத்த 36 மணி நேரத்தில் வலுவடையக் கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியிலிருந்து ஆந்திர கடலோர பகுதிகள் வரை ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (22.05.2025) மற்றும் நாளை மறுநாள் (23.05.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Meteorological Department rain weather
இதையும் படியுங்கள்
Subscribe