ஈரோடு செங்குந்தர் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ராமச்சந்திரனுக்கு சென்னை குரோம்பேட்டையிலும் சொந்தமாக வீடு உள்ளது. அவ்வப்போது ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள வீட்டுக்கும் வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த 4 ஆம்தேதி ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வீட்டுக்குச் சென்று விட்டார். செல்லும்போது வீட்டின் முன் பகுதியில் காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில்8 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் ராமச்சந்திரனின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் அவரது கார் பாஸ்ட்டேக்கில் கடந்து சென்றதற்கான மெசேஜ் வந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தனது காரை யாரோ திருடிக் கொண்டு செல்வது தெரிய வந்ததை அடுத்து உடனடியாக வீரப்பன் சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்று காலை போலீசார் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்றனர். அப்போது ராமச்சந்திரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. பீரோ திறக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீசார் ராமச்சந்திரனுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அப்போது அவர் பீரோவில் 4 பவுன் நகை இருப்பதாக கூறினார். போலீசார் பீரோவை பார்த்தபோது அதில் 4 பவுன் நகை திருடு போயிருப்பதைக் கண்டுபிடித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பீரோவில் பணம் வைக்கவில்லை. மர்ம நபர்கள் நகையைத்திருடிக் கொண்டு செல்லும்போது காரையும் கள்ளச் சாவி போட்டுத்திருடிச் சென்றுள்ளனர்.
அந்தக் கார் சுங்கச்சாவடியைக் கடந்தபோது ஃபாஸ்ட் டேக் மூலம் ராமச்சந்திரனுக்கு மெசேஜ் சென்றதால் இந்த திருட்டு தெரியவந்தது. திருட்டு நடந்த ராமச்சந்திரன் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. அருகில் இருக்கும் வீடுகளில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ராமச்சந்திரன் வீட்டிலிருந்து கார் வெளியே சென்றது பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.