மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 13வது நாளாக, இன்றும் (08.12.2020) விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நாடுமுழுவதும் மறியல் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில், வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில், வணிகர்கள் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.