/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem_8.jpg)
சேலம் அருகே தந்தையை, கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் அரசு மருத்துவமனை செவிலியர் உள்பட நான்கு பேருக்கு சேலம் மாவட்ட நீதிமன்றம் இன்று (அக்டோபர் 3, 2018) ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
சேலத்தை அடுத்த வீராணம் அருகே உள்ள வீமனூரைச் சேர்ந்தவர் தொப்பகவுண்டர். இவருடைய மகள் சசிகலா. சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் பகத்சிங். இரு குழந்தைகள் உள்ளனர். சசிகலாவுக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
அரசு மருத்துவமனையில் இருந்து பணி முடிந்து திரும்பும் சசிகலாவை சில ஆண்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வீட்டில் விடுவதை தொப்பகவுண்டர் கண்டித்தார். இது தொடர்பாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரும் பிரிந்து சென்று விட்டார். ஆனாலும் சசிகலா, வேறு சில ஆண்களுடன் நெருக்கமாக பழகுவதை விடாமல் தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11.8.2015ம் தேதி, வீட்டில் இரவில் தனியாக படுத்துத் தூங்கிய தொப்பகவுண்டரை மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வீராணம் காவல்துறையினர், சசிகலா, பெரிய வீராணத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்கிற ஸ்டீபன்ராஜ் (28), ராஜா (29), மணிகண்டன் (26) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
சசிகலாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட தொப்பகவுண்டர், அவரை அடிக்கடி மிரட்டி வந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் வீரக்குமார் ஆஜராகி வாதாடினார். நீதிபதி ஸ்ரீதரன் இந்த வழக்கில் இன்று (அக்டோபர் 3, 2018) தீர்ப்பு அளித்தார். சசிகலா, ஸ்டீபன்ராஜ், ராஜா, மணிகண்டன் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
தண்டனை பெற்றவர்களில் ஸ்டீபன்ராஜ் என்பவர் மீது கடந்த ஆண்டு ஆட்டோ ஓட்டுநர் சசிகுமார் என்பவரை கொலை செய்த வழக்கும் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)