
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இரும்பு பட்டறை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கூலிப்படையினரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கணவன், மனைவி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இரும்பு பட்டறை வைத்திருப்பவர் சிவக்குமார். சிவக்குமாருக்கும் பாபு என்ற நபருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் பட்டறையில் சிவக்குமார் ஊழியர்களுடன் வேலைபார்த்து கொண்டிருந்த பொழுது முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் சரமாரியாகத் தாக்கினர். இதில் சிவக்குமார் மற்றும் உடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேர் என மூன்று பேரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
மூவரும் படுகாயங்களுடன் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக டிப்ளோமா இன்ஜினியர் பாபு அவரது மனைவி நந்தினி, உறவினர்கள் விமல் ராஜ், கிஷோர் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் என ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 16 வயது சிறுவன் அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.