Mental health program officer who gave important advice to students

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (29.08.2024) மாணவர் மனநலம் காக்கும் "மனம்" திட்டத்தின் கீழ் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மாலா செல்வராணி, உளவியல் கவுன்சிலர் பாலமுருகன், மனநல திட்ட செவிலியர் வெண்ணிலா ஆகியோர் அடங்கிய குழுவினர் பள்ளி மாணவிகளிடம் மனநலம் சார்ந்த அறிவுரைகள் வழங்கினர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் மாலா செல்வராணி பேசும் போது, “பள்ளி மாணவிகளான வளரிளம் பருவத்தில் உள்ள உங்களுக்கு உடல்நலம் மற்றும் மனநலம் மிகவும் முக்கியம். உடல் நலம் காக்க சத்தான உணவுகள் எடுத்துக் கொள்வதுடன் சுத்தம் என்பது முக்கியம். அதே போல மனநலம் காப்பது என்பது தற்போது உங்களால் படிக்க முடியவில்லை, புத்தகத்தைத் திறந்தால் சோர்வு ஏற்படுகிறது. சிந்தனை வேறுபக்கம் செல்கிறது. எவ்வளவு படித்தாலும் நினைவில் இல்லை, தூக்கம் வருவதில்லை பல்வேறு சம்பவங்கள் அடிக்கடி நினைவுக்கு வருகிறது என்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதற்கு முதல் காரணம் நீங்கள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்துவது. இணையவழியில் கண்டதையும் தேடிப் பார்ப்பது. இதுவும் ஒரு மனநலம் சார்ந்தது தான். இதிலிருந்து விடுபட வேண்டும். இல்லை என்றால் ஆபத்தில் முடியும். இதற்கு மாவட்ட மனநல திட்ட இலவச ஆலோசனை எண்ணுக்கு அழைத்துப் பேசினால் தீர்வுகள் கிடைக்கும். அதே போல ஒவ்வொரு மாதமும் 4வது வெள்ளிக்கிழமை கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையில் நடக்கும் மனநல ஆலோசனைக்கு வரலாம். கீரமங்கலத்தில் தான் ஆலோசனை மையம் சிறப்பாகச் செயல்படுகிறது.

Advertisment

அதே போல சக மாணவிகளை நண்பர்களை நோகடிக்கும் விதமாக நடந்து கொள்வதும் மனநலம் சார்ந்தது தான். உங்களுக்கு வேறு சந்தேகங்கள் இருந்தால் இப்போது கேட்க முடியவில்லை என்றால் பேப்பரில் எழுதிக் கொடுங்கள். உங்களுக்கான தீர்வுகளை நாங்கள் சொல்கிறோம்” என்றார். அதே போல கற்றல்குறைபாடு உள்ள மாணவிகளை எப்படிக் கண்டறிவது அவர்களுக்கு எந்த வகையில் பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.