
காஞ்சிபுரம், ஈரோடு, ராணிப்பேட்டை உள்ளிட்ட ஊர்களில் புதிய தோழி விடுதிகள் அமைய இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மகளிர் தின நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,'' மகளிர் தினம் கொண்டாடப்படும் மாதத்தில் நான் பிறந்ததால் மகிழ்ச்சியையும் பெருமையும் அடைகிறேன். சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பிங்க் ஆட்டோ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத்தின் நோக்கமே பாலின சமத்துவ பேதம் இல்லை என்பதுதான். தடைகளை தாண்டி சாதனைகளை படைக்கும் உங்களை பாராட்டுகிறேன். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதால் மகளிர் தான் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன் காஞ்சிபுரம், ஈரோடு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும். உங்கள் மனவலிமையும், ஆளுமை திறமையையும் ஊக்கத்தையும் பார்த்து பெருமிதம் அடைகிறேன். இந்த காட்சி 50 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது. 100 ஆண்டுகளுக்கும் முன்னாள் பார்க்கவே முடியாது. ஆனால் இன்று எல்லா பக்கமும் பெண்கள் வந்து விட்டார்கள். நான் முதலமைச்சராக அனைத்து மக்களுக்கும் வைக்கின்ற கோரிக்கை ஆண் ஆதிக்க மனோபாவம் அழிய வேண்டும். பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை. அவர்களும் நம்மைப் போலவே எல்லா உரிமையும் கொண்ட சக மனிதர்கள் என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்ற வேண்டும்.
அரசியல் வேலையில் இருந்து எல்லா இடத்திலும் பெண்களுக்கு உரிய மதிப்பு, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கேலி பேசுவதும் அவர்களுடைய வளர்ச்சியைக் கொச்சைப்படுத்துவதும் இருக்கக் கூடாது. அது தான் உண்மையான சமுதாய சிந்தனை வளர்ச்சி. இதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். திமுக அரசு பெண்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்கிறது. இதையெல்லாம் பார்த்து ஆண்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். 'என்னங்க எல்லா திட்டமும் பெண்களுக்கு தானா?' எங்களை ஏன் விட்டுவிட்டீர்கள் என ஆண்கள் கேட்கக் கூடிய அளவில் தான் அரசு செயல்படுகிறது. அது தொடரும்''என்றார்.