Memorial Day of the Member of the Legislative Assembly who received praise from Jayalalitha

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி.முத்துக்குமரன். கம்யூனிஸ்ட் கட்சியின் மீது கொண்ட ஆர்வத்தில் பள்ளி காலத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு படிப்படியாக உயர்ந்து மா.செ. பொறுப்புக்கு வந்தவர். சிறு வயதிலேயே மா.செ. ஆனவர் என்ற பெருமையைப் பெற்றார்.

Advertisment

2011ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஒரு வருடத்திற்குள் மக்கள் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் அதிகமாகவும் சுருக்கமாகவும் கேள்விகளைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர் என்று ஜெ’விடம் பாராட்டையும் பெற்றார்.

புதுக்கோட்டை நகரில் பல ஆண்டுகளாக வீட்டு மனை இன்றி குடியிருந்தவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வாங்கிக் கொடுத்தார். இப்படி ஏழை மக்கள் மனதில் குறுகிய காலத்தில் அதிகஇடம்பிடித்த முத்துக்குமரன் 2012 ஏப்ரல் 1ந் தேதி ஒரு கட்சித் தோழர் வீட்டுக்குச் சென்றார். அப்போது புதுக்கோட்டை - அன்னவாசல் சாலையில் காரில் செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்தத் துயர நிகழ்வைக் கேள்விப்பட்டு ஒட்டு மொத்த பாட்டாளி மக்களும் கட்சிப் பாகுபாடின்றி அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் குவிந்து கதறி அழுதனர்.

Advertisment

இவரது இறப்புமாவட்டம் முழுவதும் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. அதன்பிறகு, அவரது பெயரில் மன்றங்கள் உருவாக்கப்பட்டு நற்பணிகள் செய்வதுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி வருகின்றனர். இன்று அவரது நினைவிடத்தில் சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் முத்தரசன், மா.செ. மாதவன் உள்ளிட்டதோழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினார்கள். நெடுவாசல் கிராமத்தில் வழக்கம் போல அன்னதான நிகழ்வுகளும் நடந்தது.