Skip to main content

சொல்லாம ஏன் போட்டீங்க? பெரியார் பல்கலை பேராசிரியருக்கு 'மெமோ!' 

Published on 09/12/2023 | Edited on 10/12/2023
memo to periyar university professor

பெரியார் பல்கலை நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறாமல், புத்தகங்கள் வெளியிட்டதாக, பேராசிரியரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை (மெமோ) அனுப்பப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுப்ரமணி. இதே பல்கலையில் முன்பு மக்கள் தொடர்பு அலுவலர் பணியையும் கூடுதலாக கவனித்து வந்தார். தீவிர பெரியாரியவாதியான இவர், பெரியார் குறித்து, 'ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?' 'மெக்காலே - பழமைவாதக் கல்வியின் பகைவன்', 'பெரியாரின் போர்க்களங்கள்' ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், புத்தகங்கள் எழுதி வெளியிடுவது தொடர்பாக பல்கலை நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறப்படவில்லை என்றும், அனுமதியின்றி புத்தகங்கள் வெளியிட்டது பல்கலை சாசன விதிகளை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டு, பேராசிரியர் சுப்ரமணியிடம் விளக்கம் கேட்டு, பல்கலையின் 'நிரந்தர' பொறுப்பு பதிவாளர் தங்கவேல் குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பி உள்ளார். 

memo to periyar university professor

பெரியார் பல்கலையின் இந்த செயல், பல்கலை வட்டாரத்தில் மட்டுமின்றி உயர்கல்வித்துறை ஆசிரியர்கள் சங்கங்கள் வரை சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பல்கலை வட்டாரங்களில் விசாரித்தபோது, ''பேராசிரியர் சுப்ரமணி விதிகளை மீறி புத்தகம் வெளியிட்டது மட்டுமின்றி, அவர் மீது வேறு சில புகார்கள் குறித்தும் விளக்கம் கேட்டு பல்கலை நிர்வாகம் குறிப்பாணை அனுப்பி உள்ளது. 

இது தொடர்பாக பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது, ''பேராசிரியர் சுப்ரமணி, பெரியார் குறித்த புத்தகம் எழுதி வெளியிட்டதும், அவர் தமிழக முதல்வரிடம் புத்தகத்தைக் கொடுத்து வாழ்த்துப் பெற்றதை புகைப்படம் எடுத்ததும் எனக்கு முன்பே தெரியும். அப்போது அதை நாங்களும் பெரிது படுத்தவில்லை. இப்போது அவர் மீது புகார்கள் வந்ததால்தான் உரிய விளக்கம் அளிக்கும்படி குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது.   புகார்களையும் விசாரிக்க தனித்தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒருவர், நூல் வெளியிடுகிறார் எனில் அவர் நிர்வாகத்திடம் முன்அனுமதி பெற வேண்டும் என்பது சாசன விதிகளில் உள்ளது. ஆனால், பேராசிரியர் சுப்ரமணி அனுமதியின்றி நூல் வெளியிட்டுள்ளார்'' என்றார். 

memo to periyar university professor

பல்கலையின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பேராசிரியர்கள் தரப்பில் விசாரித்தோம். ''பெரியார் பல்கலையில் கடந்த காலங்களில் நடந்த ஊழல் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இப்போதைய துணைவேந்தர் ஜெகநாதன், ஏற்கனவே வேளாண்மைப் பல்கலையில் பணியாற்றி வந்தார். அங்கிருந்தும், இப்போது பெரியார் பல்கலையில் இருந்தும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் அகவிலைப்படி பெற்று வருவதாகவும், அது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் புகார் கிளம்பியது.

அரசு விசாரணைக்குழு அமைத்தது, அகவிலைப்படி விவகாரம் ஆகியவற்றின் பின்னணியில் பேராசிரியர் சுப்ரமணியும், டெலிபோன் ஆபரேட்டராக பணியாற்றி வந்த சக்திவேலுவும்தான் உள்ளதாக பல்கலை நிர்வாகம் கருதுகிறது. இதற்கெல்லாம் பழி வாங்கும் நோக்கத்தில் சக்திவேலை அண்மையில் பணியிடைநீக்கம் செய்துவிட்டனர்.

இந்த நிலையில்தான், இதழியல் துறை பேராசிரியர் சுப்ரமணியத்தையும் கட்டம் கட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அவரிடம் விளக்கம் கேட்டு, குற்றச்சாட்டு குறிப்பாணைகளை வரிசையாக அனுப்பி வைத்திருக்கிறது பல்கலை நிர்வாகம். இதே பல்கலையில் தமிழ்த்துறைத் தலைவராக உள்ள பெரியசாமி, கோயிலில் முழுநேர ஓதுவாராக பணியாற்றிக் கொண்டே, அதே காலகட்டத்தில் முழுநேர முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை முடித்ததாக போலி அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்துதான் உதவி பேராசிரியராக முதன்முதலில் பணியில் சேர்ந்தார். அவருடைய பணி நியமனமே தவறானது.

memo to periyar university professor

பெரியசாமிக்கு எதிராக ஏகப்பட்ட ஆதாரங்கள் இருந்தும், அவர் மீது புகாருக்கு மேல் புகார்கள் அனுப்பியும் கூட இதுவரை எந்த துணைவேந்தரும், பதிவாளரும் சம்பிரதாயத்துக்குக் கூட விசாரணை நடத்தவில்லை. ஆனால் பேராசிரியர் சுப்ரமணி மீது புகார்கள் வந்ததாக ஏதோ ஒரு மொட்டை பெட்டிஷனை கையில் வைத்துக்கொண்டு, அவருக்கு எதிராக விசாரணை கமிட்டி அமைத்துள்ளனர். 

வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த பிரேம்குமாருக்கு எதிராக திட்டமிட்டு சில புகாரைப் பெற்று, அதன்மீது எந்த விளக்கமும் கோராமல் அவரை பணியிடைநீக்கம் செய்தனர். ஆனால் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் மீது புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தும் நிர்வாகம் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. பெரியார் பல்கலையைப் பொருத்தவரை ஆளுக்கு ஒரு ரூல், ஊருக்கு ஒரு நியாயம் என்ற ரீதியில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது'' என அதிருப்தியுடன் கூறுகிறார்கள் பேராசிரியர்கள். 

பல்கலைக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் பேராசிரியர்கள், தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்