mekedatu dam construction tamilnadu chief minister invite all parties meeting

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 12- ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (09/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சரும், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சனைக் குறித்துத் தமிழகத்தின் நிலைப்பாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, இந்த பிரச்சனையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Advertisment

மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனக் கோரி கர்நாடக முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய போது, இந்த அணை கட்டுவதால், தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராய் அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிப்படத் தெரிவித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சனை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் தலைமையில், வருகிற 12/07/2021 அன்று காலை 10.30 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

Advertisment

இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும் தமிழக முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்." இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.