Skip to main content

லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

pic_9.jpg

 

தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தமிழ்நாடு முதல்வரால் கடந்த 5ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதுக்கு மேற்பட்ட உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகளை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான ஃபைல்களை வழங்குதல், அவசியமான மருத்துவ சேவைக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

 

இத்திட்டம் துவங்கப்பட்டு நேற்று முன்தினம்வரை (27.08.2021) மாநிலத்தில் மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 732 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். திருச்சியில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பெண் சுகாதார தன்னார்வலர்கள், நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், இயன்முறை மருத்துவர்கள், இடைநிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் இடம்பெறுவர். பொது சுகாதாரத்துறையின் களப்பணியாளர்கள், இந்தக் குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துகின்றனர்.

 

அதன்படி திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை உயர் ரத்த அழுத்த நோய் உள்ள 1,648 நபர்களுக்கும், நீரிழிவு நோய் உள்ள 1,200 நபர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுள்ள 849 நபர்களுக்கும் மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், 213 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 218 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

 

‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 27ஆம் தேதிவரை இதுவரை 41,303 பேர் பயனடைந்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.