மருத்துவக் கழிவுகள் அகற்றம்; கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

Medical waste disposal Surveillance work is intense

திருநெல்வேலி மாவட்டம் சீதற்பநல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர், பழவூர், கொண்டாநகரம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூட்டை மூட்டையாகக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும், தனியார் நிலங்களிலும் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் எனத் தெரியவந்தது. அதாவது திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அதிகப்படியாகக் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த மருத்துவக் கழிவில் மருத்துவமனையின் அனுமதிச் சீட்டுகள், ரத்தக் கசிவுகள், பஞ்சுகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் கழிவுகளாகக் கொட்டப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, ஊராட்சித்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன்படி 5 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் அப்பகுதி மக்கள், ‘தமிழக - கேரள எல்லையில் வாகன சோதனையை அதிகரிக்க வேண்டும்’ என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரளாவைச் மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ‘இந்த கழிவுகளைக் கேரள அரசு அகற்ற வேண்டும்’ எனப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் கேரள அரசு சார்பில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன்பேரில் 70 பேர் கொண்ட 6 குழுவினர் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக நேற்று (22.12.2024) திருநெல்வேலிக்கு வந்திருந்தனர். இதனையடுத்து நேற்று (22.12.2024) 18 லாரிகளில் கழிவுகள் கேரளாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் மேலும் 30 லாரிகளில், இன்று (23.12.2024 மருத்துவ கழிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மருத்துவ கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து 30 லாரிகளில் கேரளாவிற்கு இந்த கழிவுகளை அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் வேறு பகுதிகளில் கழிவுகள் ஏதும் கொட்டப்பட்டுள்ளதா? எனக் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Kerala Tirunelveli VAO
இதையும் படியுங்கள்
Subscribe