Advertisment

இளைஞர்களுக்கு போதை ஊசி விற்பனை; மருந்து கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது!

medical shops owners arrested dharmapuri district police

தர்மபுரியில், இளைஞர்களுக்கு போதை ஊசி செலுத்தி வந்த மருந்து கடை உரிமையாளர் உள்பட நான்கு பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கோம்பேரி சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள், மருந்து குப்பிகள் சாலையோரம் கிடந்தது.

Advertisment

இதுகுறித்த தகவலின்பேரில் தர்மபுரி மாவட்ட மருந்து துறையைச் சேர்ந்த ஆய்வாளர் சந்திராமேரி தலைமையிலான அதிகாரிகள், காவல்துறை முன்னிலையில் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மிட்டாதின்ன அள்ளி மயில் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த வஜ்ரவேல் (வயது 47) என்பவர் போதை ஊசியை இளைஞர்களுக்குப் போட்டு வருவதாக தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் வஜ்ரவேலைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

தர்மபுரியில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை ஊசிகளை வாங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட மருந்து கடை உரிமையாளர் சோமசுந்தரம் (வயது 51) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

பெங்களூருவில் இருந்து காமராஜ் (வயது 50) என்பவர் போதை மருந்தை வாங்கி வந்து தன்னிடம் கொடுப்பதாகவும், அதை தன்னுடைய கடையில் ரகசியமாக வைத்து விற்பனை செய்து வந்ததாகவும், இதில் சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (வயது 47) என்பவருக்கும் தொடர்பு உள்ளதாகவும் மருந்து கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து முருகேசனைப் பிடித்து விசாரித்தபோது, அவர் தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் போதை மருந்துகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது அங்கு பெட்டி பெட்டியாக போதை மருந்தும், சிரிஞ்சுகளும் இருப்பது தெரிய வந்தது. அவற்றை மொத்தமாக பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 38 ஆயிரம் ரூபாய் என்று மருந்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருந்துத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை காவல்நிலைய காவல்துறையினர் வஜ்ரவேல், சோமசுந்தரம், காமராஜ், முருகேசன் ஆகிய நான்கு பேரையும் மார்ச் 11- ஆம் தேதி கைது செய்தனர்.

பெங்களூருவில் இருந்து போதை மருந்து குப்பிகளை தலா 7 ரூபாய்க்கு வாங்கி வரும் காமராஜ், அவற்றை சோமசுந்தரத்திடம் கொடுத்துள்ளார். அவர் வஜ்ரவேல், முருகேசன் ஆகியோருக்கு மருந்து குப்பிகளை தலா 30 ரூபாய்க்கு விற்றுள்ளார். அவற்றை வாங்கிச் செல்லும் இருவரும், அவர்களுக்குத் தெரிந்த நண்பர்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருந்து இளைஞர்களுக்கு போட்டு வந்துள்ளனர். இளம்பெண்கள் சிலரும் இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கமலநத்தம், சாமிசெட்டிப்பட்டி, ஏலகிரி, வெள்ளக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் பலர் இவர்களிடம் அடிக்கடி போதை ஊசிகளைப் போட்டுச் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. சுமார் 200- க்கும் மேற்பட்ட ரெகுலர் வாடிக்கையாளர்களை இவர்கள் கைவசம் வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் போதை ஊசி செலுத்த 50 ரூபாய் வசூலித்து வந்துள்ளனர்.

இந்த ஊசி செலுத்திக் கொள்வதன் மூலம் மதுபானம் குடித்தால் கிடைக்கும் அளவுக்கு போதை கிடைக்கும் என்றும், மதுபானங்கள் வாங்குவதை விட செலவு குறைவு என்பதால் கூலித்தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்களை குறிவைத்து அதிகளவில் போதை ஊசி விற்பனை செய்து வந்துள்ளனர்.

பிடிபட்டவர்களில் முருகேசன் என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போதை ஊசிகளை விற்பனை செய்து வந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. கைதான நான்கு பேரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

போதை ஊசி கும்பல் பிடிபட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe