ADVERTISEMENT

அனுமதி இல்லாமல் நடத்தப்படும் மருத்துவ முகாம்கள்; கேள்விக்குறியாகும் மக்களின் உயிர் 

11:50 AM Aug 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆத்தூர் தொகுதியில் கிராம ஊராட்சிகளில் சுகாதாரத் துறையினர் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் மருத்துவ முகாம்களால் பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு ஆர்வம் காட்டாத ஊராட்சி நிர்வாகங்கள் தனியார் மருத்துவ முகாம்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் குறிப்பாக கிராம ஊராட்சிகளில் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனுமதி இல்லாமல் கிராம ஊராட்சிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர். முறையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை உபகரணங்களை கொண்டுவராமல் மருந்து மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து ‘உங்களுக்கு இந்த நோய் உள்ளது’ என கூறி தங்கள் பகுதியில் உள்ள மருத்துவ முகாம் பதிவு அட்டை மூலம் பதிவு செய்து எங்கள் மருத்துவ மனைக்கு வந்தால் காப்பீட்டு திட்ட அட்டை மூலம் அறுவை சிகிச்சை இலவசமாக செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை அழைத்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

புகழ்பெற்ற மருத்துவமனைகள் கண் பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தும் போது, மருத்துவத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். ஆனால் இம்மாதிரி தனியார் மருத்துவமனைகள் நடத்தும் மருத்துவ முகாம்களில் உள்ளுரைச் சேர்ந்த வட்டார மருத்துவ அலுவலரோ அல்லது அப்பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளரோ கலந்து கொள்வதில்லை. கண்காணிப்பதும் இல்லை. மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் தரமானதாக இருக்குமா என்பது கூட தெரியாமல் போய்விடுகிறது.

நேற்று ஆத்தூர் ஒன்றியம் பித்தளைபட்டி ஊராட்சியில் திருமங்கலத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு சுகாதார பணிகள் உதவி இயக்குநரிடம் அனுமதி பெறவில்லை. இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜனிடம் கேட்டபோது, “எங்களிடமிருந்து அனுமதி பெறாமல் கிராம ஊராட்சிகளில் மருத்துவ முகாம்களை நடத்தக் கூடாது. ஏனென்றால் மருத்துவ முகாம் மூலம் பொதுமக்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். பித்தளைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருந்தாலும் எங்களிடம் (சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம்) அனுமதி பெறாமல் மருத்துவ முகாம் நடைபெற்றது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார சுகாதார ஆய்வாளரிடமும் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT