ADVERTISEMENT

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்" - முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை

01:01 PM Dec 27, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, “கரோனாவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி அவசியம் என்பதை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு உதவியோடு மாநில வளர்ச்சிக்கு பல திட்டங்கள் கொண்டு வருவோம்.

மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம். மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில அந்தஸ்து நமது நீண்ட நாளைய கனவு, விருப்பம், கோரிக்கை. பிரதமர் மோடிக்கும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர விருப்பம் உள்ளதுடன் கவனத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. மாநில அந்தஸ்து தேவை என்பதை பத்திரிகைகளும் ஊடகங்களும் வலியுறுத்த வேண்டும். பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை மக்கள் நம்புகின்றனர். மக்கள் நம்பும்போது சரியான செய்திகளைத் தரவேண்டும். பத்திரிக்கையாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் நியாயமானவை, அவை படிப்படியாக நிறைவேற்றப்படும். பத்திரிகையாளர்களில் விடுபட்டவர்களுக்கு மனைப்பட்டா தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது, “புதுச்சேரியில் கரோனா மற்றும் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பத்திரிகைகள் மிகவும் சிறப்பாக பணியாற்றின. பத்திரிகைகள் மூலமாக கிடைக்கும் தகவல்களால் தகுந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க முடிந்தது”என்றார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே..எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்ட் ஜான்குமார், செய்தித்துறை இயக்குநர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பத்திரிகையாளர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் முருகவேல், கந்தன், மூத்த பத்திரிகையாளர்கள் பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பூவராகன், துரைசாமி, நடராஜன், வைத்தியலிங்கம், உதயநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மூத்த பத்திரிகையாளர்களுக்குப் பணிகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது. கரோனா பணிகளில் சிறப்பாக செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் ஸ்ரீராமலு, முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் சார்பில் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ராஜா பேசுகையில், ‘4 மாதத்துக்கு ஒருமுறை அரசின் அடையாள அட்டை மற்றும் அங்கீகார அட்டைக்கான கமிட்டியை கூட்டி பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டைகளை உடனே வழங்கிட வேண்டும். தமிழகத்தை போல பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் சுதந்திர தினவிழாவின் போது, சிறந்த பத்திரிகையாளர், புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளரை செய்தி மற்றும் விளம்பரத்துறை மூலம் தேர்வு செய்து விருதும், ரூ. 10 ஆயிரம் ரொக்கமும் வழங்க வேண்டும்.

பத்திரிகையாளர்களின் நீண்ட கால கோரிக்கையான அரசின் சலுகை விலையில் மனைப்பட்டா கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதிகளிடமிருந்து பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளதை போலவே பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி தேசிய பத்திரிகையாளர்கள் தினவிழா நடத்த வேண்டும். ஜிப்மர் மற்றும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு சிகிச்சையில் முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூத்த பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்ந்து செயல்பட ஏதுவாக அதற்கான நிதியை பட்ஜெட்டில் தனியாக துறைக்கு ஒதுக்கித்தர வேண்டும்.

இலவச மடிக்கணினி மற்றும் பண்டிகை கால பரிசு கூப்பன் உள்ளிட்ட சலுகைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தைப்போல பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். கரோனாவில் இறந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை ரூ.10 லட்சத்தை விரைந்து வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சியில் மூத்த செய்தியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சங்க பொருளாளர் ஆனந்தி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT