MDMK Vaiko condemn to shakthi matriculation school

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனின் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்றும் நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மான முறையில் இறந்தார்.

மாணவியின் மரணத்தில் புதைந்து உள்ள மர்மங்களை வெளிக் கொணர்வது பத்திரிகை, ஊடகங்களின் கடமை என்பதால் நக்கீரன் இதழும், ஊடகமும் இதில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வந்தது. தனியார் பள்ளி மாணவி இறப்பின் பின்னணி குறித்து நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் ஆய்வு செய்து பல தகவல்களை மக்கள் முன் வைத்தார்.

Advertisment

இந்நிலையில், கள்ளக்குறிச்சி சென்று மேலும் புலனாய்வில் ஈடுபட்ட நக்கீரன் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பட கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். அவர்கள் சென்ற மகிழுந்தை 15 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று தலைவாசல் அருகே தடுத்து நிறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்தியது, பள்ளி நிர்வாகம் ஏவிவிட்ட வன்முறைக் கும்பல் என தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியகும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.

ஜனநாயக நாட்டில் பத்திரிகை, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுவதையும், செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.