Skip to main content

லட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச்செய்வதற்கு மோடி-எடப்பாடி சதித்திட்டம்: வைகோ எச்சரிக்கை

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
’’தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.

 

v

 

சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமை பெற்றிருக்கும் ‘நெற்களஞ்சியமான’ காவிரி பாசனப் பகுதி மக்களை சோற்றுக்கு கை ஏந்தும் நிலைக்குத் தள்ளிவிட மோடி அரசு மூர்க்கத்தனமாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளது. 

 

மோடி அரசுக்குக் காவடி தூக்கும் கையாலாகாத எடப்பாடி அரசு, காவிரி டெல்டா மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் இழைத்து வருகிறது.

 

    காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகத்தின் வேளாண்மை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.


2017 பிப்ரவரி 15 இல் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, இந்தியா முழுவதும் 8 கடற் பகுதிகள் மற்றும் 23 உள்நிலப்பகுதிகள் அடங்கிய மொத்தம் 31 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.    பின்னர் 2018 ஜனவரி 19 ஆம் தேதி நாடு முழுவதும் 55 புதிய வட்டாரங்களில் நூறு விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள ஏல நடைமுறை தொடங்கப்பட்டது.                                                                                                                                                                                                                                                                                                                                                                       

இதற்காக ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ‘நெல்ப்’ (New Exploration Licensing Policy -NELP) எனப்படும் உரிமம் வழங்கும் திட்டத்தை மாற்றி, ‘ஹெல்ப்’ (Hydrocarbon Exploration and Lincesing Policy -HELP) எனும் ஒற்றை உரிமம் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி புதைபடிவ எரிபொருளான மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் மற்றும் நீர்ம உரிவாயு உள்ளிட்ட எந்த வகையாக இருந்தாலும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் பூமிக்கு அடியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் . தனித் தனியாக உரிமங்கள் பெறத் தேவை இல்லை. இதற்காக ‘திறந்தவெளி அனுமதித் திட்டம்’ (Open Acreage Lincensing Policy -OALP) ஒன்றையும் மத்திய அரசு அனுமதித்து இருக்கின்றது.

 

மேலும் ஓ.ஏ.எல்.பி. உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பகுதிகளை ஆய்வு மூலம் கண்டறியவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் - தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப் பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

 

1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.

 

மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


  நீரியல் விரிசல் முறையில் (Hydro Fracking) 10 ஆயிரம் மீட்டருக்கும் கீழே பூமிக்குள் ஆழமாக துளையிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரை எல்லா பக்கங்களிலும் துளை போடப்படும். பின்னர் பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண்துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டுத் துளைகளில் செல்லும் நீர் அந்தத் துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். 

 

அந்த விரிசல்கள் வழியே பூமிக்கடியில் அடைபட்டுக் கிடக்கும் எரிவாயு ஒன்றைக் கலக்கும். அவற்றை உறிஞ்சி பூமியின் மேல் பரப்புக்கு எடுத்து வந்த நீரைப் பிரித்துவிட்டு, வாயு தனியாக சுத்திகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும்.


   இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

 

வேளாண்மையை அழித்து பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் இலட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?  தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.

 

காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

ஒரு கொள்கைவாதியின் தவறான முடிவு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamoorthy passed away

திராவிட இயக்கத்தின் கொள்கை பற்றாளராகத் தமிழ் மொழி, இனத்தின் மீது அளவு கடந்த விசுவாசியாக, அரசியல் என்கின்ற பொது வாழ்வில் நேர்மையான மனிதராகப் பெருவாழ்வு வாழ்ந்த மதிமுக ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் வாழ்க்கை 28 ஆம் தேதி அதிகாலை முடிவுக்கு வந்தது.

ஈரோடு அருகே உள்ள பூந்துறை என்கிற கிராமம்தான் இவரது பூர்வீகம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி பள்ளி படிக்கின்ற வயதிலேயே அன்றைய சோசியலிஸ்ட் கட்சியின் தலைவர்களான ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெனாண்டர்ஸ் போன்ற தலைவர்கள் ஈரோட்டில் கூட்டம் நடத்தி அரசியல் வகுப்பு எடுத்தபோது அதில் கலந்து கொண்டவர். அடுத்து கல்லூரியில் படித்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியில் அப்போதே பொறுப்பேற்றார்.

கல்லூரி காலகட்டத்தில் தான் வைகோ அவர்களோடு இணைந்தார். இளமைப் பருவத்திலேயே திமுகவின் ஈரோடு மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வந்தார்.

திமுகவில் இருந்து வைகோ பிரிந்து வந்தபோது வைகோவுக்கு தளபதியாக நின்றவர் கணேசமூர்த்தி. அப்போது வைகோவுடன் வந்த 9 மாவட்டச் செயலாளர்களில் இறுதி வரை வைகோவுடன் இருந்தவர் கணேசமூர்த்தி தான். ஒருமுறை எம்எல்ஏ, மூன்று முறை எம்.பி. என அரசியல் அதிகாரம் இவருடன் இருந்து வந்தது. மத்திய அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார். விவசாய விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு, உயர் மின் கோபுரம் மற்றும் ஐடிபிஎல் என எல்லா போராட்டங்களிலும் முன்னணியில் இருந்து செயல்பட்டவர்.

அதேபோல் தமிழீழ விடுதலைக்குத் துணையாக நின்று பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். தமிழீழம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளை  ஆதரித்துப் பேசியதற்காக அன்றைய ஜெயலலிதா ஆட்சியில்  வைகோவுடன் கணேசமூர்த்தியையும்  பொடா சட்டத்தில் கைது செய்து 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அமைதி, அன்பு, பொறுமை தனது அரசியல் வாழ்வில் எவ்வித அடாவடித்தனமும் செய்யாதது, அதேபோல் கொள்கையில் ஒரு சமரசமற்ற போராளியாய் வாழ்ந்தது என்பது அவருக்கு பெருமை தான்.

இந்த நிலையில் அண்மைக்காலமாக கணேசமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி காலை ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் உயிர்க்கொல்லி மாத்திரையை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். உடனடியாக ஈரோடு தனியார் மருத்துவமனையிலும் அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 28 ஆம் தேதி இறந்துவிட்டார். கணேசமூர்த்தியின் இறப்பு மதிமுக பொதுச் செயலாளரான வைகோ உட்படத் தமிழ்த் தேசியவாதிகள் பலருக்கும் மிகுந்த துயரத்தைக் கொடுத்திருக்கிறது.

அன்பு சகோதரரை இழந்துவிட்டேன் என்று கண்ணீர் மல்கப் பேசிய வைகோ,  எம்.பி சீட் வழங்காததால்தான் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. திமுகவிடம் இரண்டு சீட் கேளுங்கள் கிடைத்தால் நான் நிற்பதை பற்றி யோசிக்கலாம். இல்லை என்றால் துரை மட்டும் நிற்கட்டும் என்று கூறினார். கல்லூரிக் காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகிய அன்புச் சகோதரரை இழந்துவிட்டேன் என்று நா தழுதழுக்க பேசினார்.