Skip to main content

கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்தார் வைகோ! (படங்கள்)

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கிய நிலையில், அமைதியான முறையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இன்று இரவு 07.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிபிஇ கிட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 2- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

 

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ தனது மகன் துரை வையாபுரியுடன் இன்று (06/04/2021) காலை 09.00 மணியளவில் வாக்குச்சாவடிக்குச் சென்று 25 நிமிடம் காத்திருந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "வாக்குப் பதிவிற்காக வரிசையில் நிற்கிற மக்களின் முகங்களைப் பார்க்கையில், ஏழை எளிய மக்கள் அன்றாடங்காய்ச்சிகள் தினக் கூலிகள் அவர்கள் எல்லாம் நிறைய நிற்கிறார்கள். அவர்களின் முகத்தில் புன்சிரிப்பைக் கண்டேன். அவர்கள் என்னை வரவேற்பதைக் கண்டேன். ஆகவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்களிடம் ஆதரவு திரண்டு இருப்பதையும் காண முடிகிறது. இந்தத் தேர்தல் முடிவில், இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும். இந்தத் தொகுதியில் ராஜா மிகப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

 

அதைத் தொடர்ந்து, அவரிடம் பத்திரிகையாளர்கள், 'கரூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறக் கூடாது' என்று அ.தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு பற்றி கேட்டபோது, "அந்த மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். தேர்தல் தொடங்கிவிட்டது. படுதோல்வி அடையும் நிலையில் மனு கொடுப்பது அர்த்தமற்றது" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்