Skip to main content

"குடியுரிமை திருத்தச் சட்டம் தூக்கி எறியப்பட வேண்டிய சட்டம்"- மதிமுக எம்.பி. தாக்கு!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை நிபந்தனையற்ற முன் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து  ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

mdmk mp about Citizenship Amendment Act

 



மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தலைவர் தனகுறிஞ்சி தலைமை தாங்கிய இப்போராட்டத்தில் ஈரோடு ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த குடியுரிமை சட்டமானது இந்தியாவில் பிறந்த குழந்தைக்கும் கூட குடியுரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்கியுள்ளது. இந்த குடியுரிமை சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆகவே இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எதிர்த்துப் போராடி, அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற முறையில் மக்கள் சக்தியை ஆர்பாட்டம், பேரணி போன்ற போராட்டங்களின் மூலம் திரட்டிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே அந்த உணர்வை எல்லோரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஏதோ இந்த சட்டம் இஸ்லாமியர்கள் அல்லது தமிழர்களை மட்டும் பாதிக்கும் என்பது இல்லை, நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பாதிக்கும். ஆகவே இந்த சட்டம் ஒட்டுமொத்தமாக தூக்கி எறியப்பட வேண்டிய சட்டம். இதனால் இந்தியா முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. என்னதான் இந்த பா.ஜ.க. அரசு தடுத்தாலும், மக்கள் போராட்டம் மூலம்  தட்டிக்கேட்டு திரும்பப் பெற வைப்போம்" என தெரிவித்தார். 

இந்த ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட், தமுமுக, மனித நேய ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி,திராவிடர் விடுதலை கழகம், தமிழ் புலிகள் கட்சி உள்பட 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.  


 

சார்ந்த செய்திகள்