Skip to main content

''ஆபத்துக் காலத்தில் சின்னம், கட்சி, கொடி எல்லாம் பார்க்கக்கூடாது''-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்

Published on 19/02/2023 | Edited on 19/02/2023

 

 Kamal Haasan campaign in support of EVKS Ilangovan, "Symbols, parties and flags should not be seen in times of danger"

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில் காந்தி சிலை அருகே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பரப்புரையில் பேசிய கமல்ஹாசன், ''உயிரே உறவே தமிழே வணக்கம். இங்கே வந்திருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு என் வணக்கம். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்காக அதன் சார்பில் இங்கே இருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காக வாக்கு சேகரிக்க நான் வந்திருக்கிறேன். இன்னொரு சின்னத்திற்காக ஓட்டு கேட்டதாக என்னை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆபத்துக் காலத்தில் இதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சின்னம், கட்சி, கொடி எல்லாம் தாண்டியது தேசம். அதை காக்க வேண்டும் என்று வரும் பொழுது யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

 

ஜனநாயகம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட அபாயமற்ற வழி என்று நம்பிவிட முடியாது. ஜனநாயகத்தின் வழியாகவும் சர்வாதிகாரம் நம்மளை ஆட்கொள்ள முடியும் என்பதற்கான பல சான்றுகள் உலகத்தில் இருக்கிறது. இன்று இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக நான் இங்கே வந்திருக்கிறேன். இது போக எங்களுக்குள் உறவு இருக்கிறது. அவரும் பெரியாரின் பேரன்தான் நானும் பெரியாரின் பேரன் தான். இது என்ன காந்தியாரிடம் போய் நான் காந்தியின்  கொள்ளுப்பேரன் என்கிறார் பெரியார் கிட்ட வந்தா பெரியாரின் பேரன் என்கிறார் என்று கேட்டால்... நான் சொல்கிறேன் பெரியார் காந்தியாரின் தம்பி. வெவ்வேறு கருத்துக்கள், வெவ்வேறு கொள்கைகளாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த மாதிரி கூட்டத்திலிருந்து எனது தாத்தா பேசுவதை கேட்டு வளர்ந்த பிள்ளை நான். இன்று நான் விட்டுப்போன ஒரு கடமையை செய்வதற்காக வந்திருக்கிறேன் என்று கூட நினைக்கிறேன்.

 

நான் அரசியலுக்கு வந்தது எந்த விதமான லாபத்திற்காகவோ ஆதாயத்திற்காகவோ அல்ல. அப்படி இவர்களுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும் என்றால் எப்பொழுதோ வைத்திருக்க வேண்டும். விஸ்வரூபம் என்று ஒரு படம் எடுத்தேன் அப்பொழுது என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். அப்பொழுது கலைஞர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயப்படாதே உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். வேண்டாம் ஐயா இது நாட்டு பிரச்சனை அல்ல என் பிரச்சனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். இப்போதைய முதல்வர் ஸ்டாலின் போன் செய்து உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். அப்போது அல்லவா நான் கூட்டணி வைத்திருக்க வேண்டும். அப்பொழுதும் நான் கூட்டணி வைக்கவில்லை. சுயநலத்திற்காக நான் கூட்டணி வைக்கவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் இது என்னுடைய பிரச்சனை என்று சொன்னேன். அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு என் கடனை எல்லாம் அடைத்து இப்பொழுதும் இந்த எந்த லாபமும் எதிர்பார்க்காமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கே வந்திருப்பதற்கான காரணம் நம் நாடு. இந்த கட்சியின் சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு என் ஆதரவை கொடுக்க வேண்டியது ஒரு இந்தியனாக என்னுடைய கடமை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.