Advertisment

"செவ்வாயில் விவசாயம் செய்யக் கூட போகலாம்" - மயில்சாமி அண்ணாதுரை

mayilsamy annadurai talks about farmers farming in mars planet 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின்25 ஆம்ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வகுப்பறை, கணினி அறைகளை திறந்து வைத்தார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, "மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழ். அந்த தாய் மொழியில் படிப்பதை பெருமையாக கருதுவோம். சாதித்தவர்கள் எல்லாம் தாய் மொழியில் கற்றவர்கள் தான். அந்த தாய் மொழியை கற்பிக்கும் தாய்த் தமிழ் பள்ளிகள் குறைந்து கொண்டே வருகிறது. வளைகுடா நாடுகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 18 பள்ளிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இவற்றிற்கு தமிழ்நாடு அரசு உதவிகள் செய்ய வேண்டும். தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை அரசுப் பணியாளர்களாக ஏற்க வேண்டும்.

Advertisment

இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் நான் இட ஒதுக்கீடு இல்லாமல் தகுதி அடிப்படையில் வாய்ப்பை பெற்றவன். காரணம் தாய்மொழிக் கல்வி தான். 50% பேர் தாய் மொழியில் படித்தவர்கள் தான் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். எனது 12வது செயற்கைக்கோள் சந்திராயன். ஆனால் 60 செயற்கை கோள்களில் எனது பங்கு இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை ஆள் இல்லாமல் போன செயற்கை கோள்கள். ஆனால் இனி நிலவுக்கு இந்தியரும் தமிழரும் போகலாம். செவ்வாயில் விவசாயம் செய்யக் கூட போகலாம். இந்தியாவில் சிக்கனமாக, சீக்கிரமாக செயற்கை கோள் செய்கிறார்கள் என்பதால் அமெரிக்கர்கள் கூட இங்கு வரலாம். ஆனால் விண்வெளித்துறை தனியாருக்கு போகும் நிலை உள்ளதாக சொல்கிறார்கள். இதை தமிழ்நாடு அரசு முன்னின்று எடுத்து செய்யும் போது தமிழர்கள் அதிகம் வாய்ப்பு பெறுவார்கள். இதற்கு தாய்மொழிக் கல்வி மிகவும் அவசியம் என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது, "தனி மனிதனுடைய உயர்வுக்கும், குடும்பத்திற்கும், நாட்டினுடைய உயர்வுக்கும் அடுத்த கட்ட நிலைக்கு போக வேண்டுமென்றால் கல்வி அவசியம். அந்தக் கல்வி தாய் மொழியில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த தாய்மொழி மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருக்கக்கூடிய தமிழ் மொழி.‌ அந்த தமிழ் மொழியை தாய்மொழியாக பெற்றுள்ள நாம் தாய்மொழியில் பயிலும் பொழுது இன்னும் சிறப்பாக தமிழர்களும் தமிழும் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக மிளிர முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனுடைய வெளிப்பாடகத்தான் தாய்த்தமிழ் பள்ளியின் அடுத்த கட்ட முயற்சியாக புதிய கட்டடத்தை திறந்து வைக்க பெங்களூரிலிருந்து பறந்து வந்துள்ளேன்.

தாய்ப்பால் குடித்த குழந்தைகள் உடல் ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் என்று அறிவியல் பூர்வமாக சொல்கின்றனர். அதில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் வாழ்க்கையில் சிறப்பாக செல்ல வேண்டும். போட்டிகளில் முன்னேற வேண்டும் என்றால் அடிப்படைக் கல்வி தாய்மொழிக் கல்வியாகத்தான் இருக்க வேண்டும். ஆங்கிலம் என்பது ஊடக மொழி தான் இன்னொருவருடன் பேசும் போது அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதை பின்னால் வைத்துக் கொள்ளலாம். தன்னை அழகாக வெளிப்படுத்த தான் ஆடை. ஆடையாக நான் இல்லை. அந்த வகையில் நான் நானாக இருக்க வேண்டும் என்றால் சுயமாக என்னுடைய முகவரி என்னுடைய அடையாளம் என்ற பொழுது அது தாய் மொழி தான் வரும். சுய சிந்தனை தான் முக்கியம் சிந்தித்த பிறகு அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது அதை ஆங்கிலத்தில் வெளிப்படுத்துங்கள் அதை தவறு என்று சொல்லவில்லை.ஆனால் சிந்திப்பது கட்டாயம் தாய் மொழியாக இருந்தால் அது சிறப்பாக இருக்கும்." என்றார்.

Farmers mars Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe