
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே முட்டம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை மற்றும் மூவேந்தன் என்ற 3 பேரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை நடைபெற்றது. அப்போது சாராய வியாபாரியான ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நேற்று (14.02.2025) ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து சாராய விற்பனை செய்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது தினேஷ் சிறுவன், “ஏன் தெருவில் சாராயம் விற்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர் ஹரிஷ் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஹரிசக்தியும் நேற்று மாலை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்த வாக்குவாதத்தைத் தடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இருவரையும் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த படுகொலை குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகள் 3 பேரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் படுகொலை செய்யப்பட்ட உடலை வாங்க மறுத்து இளைஞர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோர் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு முன்விரோதமே காரணம் என மயிலாடுதுறை காவல் துறை சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளடுள்ளது. அதாவது சாராய வியாபாரத்தைத் தட்டிக் கேட்டதால் இருவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. முன்விரோதம் காரணமாக தினேஷ் என்பவரை மதுபோதையில் மூன்று பேர் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனைத் தடுக்க வந்த தினேஷின் நண்பர்கள் ஹரிஷ், அஜய், சக்தி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் காவல் துறை சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.