Skip to main content

காவிரி குழுமமும், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம்... ஆர்வம் காட்டிய இளைஞர்கள்!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020

 

mayiladuthurai district blood donation camp peoples, youths

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயர்ந்து வரும் நிலையில்,  குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் ரத்தம் தேவைப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் "காவிரி குழுமமும், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் ரத்த தான முகாமை நடத்தினர்.

 

மயிலாடுதுறையில் உள்ள குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் டாக்டர் சிவக்குமார் முன்னிலையில், ரத்தம் வழங்க வந்திருந்த அனைவரையும் காவிரி குழும செயலாளர் சிவக்குமார், சட்ட ஆலோசகர் செள,சிவச்சந்திரன், சுந்தர் உள்ளிட்ட காவிரி குழுமத்தினர் மனமகிழ்ந்து வரவேற்றார்கள்.

mayiladuthurai district blood donation camp peoples, youths

முகாமிற்கு தலைமை வகித்து பேசிய காவிரி அமைப்பின் தலைவரும், எழுத்தாளருமான கோமல் அன்பரசன், "ஊருக்கு நல்லது செய்வோம் என்கிற நோக்கோடு மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக நலப்பணிகளை செய்து வரும் காவிரி அமைப்பு, கரோனா நோய்தொற்று மிக வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இந்த முகாம் காவிரி அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்தோம், மேலும் ரத்தம் தேவைப்படும் காலங்களில் இதுபோன்ற முகாம்களை நடத்தி கூடுதலாக ரத்தம் வழங்குவதற்கும் தயாராக இருக்கிறோம்," என்று பேசினார்.

 

முகாம் தொடக்கத்தில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்த மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் ஜனார்த்தனன், அரவிந்த் கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் பூமிநாதன், சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார் ஜெயின், கார்த்திகேயன், மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் சங்க நிர்வாக அலுவலர் மகாலட்சுமி ஆகியோரின் பணிகளைப் பாராட்டி காவிரி அமைப்பு சார்பில் “கோவிட் ஸ்டார்” விருது வழங்கப்பட்டது. 

mayiladuthurai district blood donation camp peoples, youths

ரத்த தான முகாமில் காவிரி அமைப்பின் இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு 60 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். காவிரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 

 

எளிய மக்களின் தேவை எதுவாகினும் அதை எப்பாடுபட்டேனும் செய்து கொடுத்து வரும் காவிரி அமைப்பின் குருதி வழங்கும் பணியும் மிகச் சிறந்தது என்கிறார்கள் மயிலாடுதுறை வாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story

மயிலாடுதுறை டூ அரியலூர்? சிறுத்தை நடமாட்டத்தால் குழப்பத்தில் வனத்துறை!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Leopard movement near Ariyalur; Forest department in confusion

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இத்தகைய சூழலில் சிறுத்தை இடம்பெயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதாவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் இடம் பெயர்ந்த சிறுத்தை குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சுற்றித் திரிவதாகத் தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை அடுத்து  வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டனர். அந்தப் பகுதியில் சுமார் 15 இடங்களில்  தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூண்டுகளும் அமைக்கப்பட்டது. அதோடு கடந்தாண்டு நீலகிரி அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி புலியான டி23 புலியைப் பிடிப்பதில் மிகுந்த நேர்த்தியாகச் செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தனர். இவர்கள் வனத்துறையுடன் சேர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இத்தகைய சூழலில் மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் சிறுத்தையைப் பார்த்ததாகத் தொழிலாளி ஒருவர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தெர்மல் ட்ரோன் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாகச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

Leopard movement near Ariyalur; Forest department in confusion

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள மருத்துவமனையில் உள்ள வேலியின் சுவரில் சிறுத்தை ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் சிறுத்தையைப் பார்த்ததாக கூறியுள்ளனர். அதே சமயம் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இது குறித்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவிக்கையில், “சிறுத்தை பிடிபட்ட பின்னரே அதன் உடல் அமைப்பை வைத்தே மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என உறுதிப்ப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார். அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.