Skip to main content

ஆயுர்வேதம் படித்தவரை சித்த மருத்துவ பதவிக்கு நியமித்த விவகாரம்! -உயர் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாதென மத்திய அரசுக்கு எச்சரிக்கை!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

The matter of appointing a person who has studied Ayurveda

 

 

பணி மூப்பின் அடிப்படையிலேயே, ஆயுர்வேதம் படித்த நபரை சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு நியமித்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை  எதிர்த்து, அவரது தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்திருந்தார். கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சித்த மருத்துவத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்படுவது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும், சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்த மருத்துவத்திலேயே தகுதியான நபர்கள் உள்ளபோது,  ஆயுர்வேதம் படித்த நபரை நியமித்தது ஏன் என்பது குறித்தும், சித்த மருத்துவ இணை இயக்குநர் பதவியைக் கலைத்தது ஏன் என்பது குறித்தும், மத்திய அரசு விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பணி மூப்பின் அடிப்படையிலேயே சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு  ஆயுர்வேதம் படித்தவரை நியமித்ததாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த அதிகாரியின் அதிகாரம் சித்தா பிரிவுக்கு மட்டுமா அல்லது, ஆயுர்வேதம், யூனானி போன்ற மற்ற ஆயுஷ் பிரிவுகளும் அடங்குமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது என எச்சரித்த நீதிபதி கிருபாகரன், இது தொடர்பாக மத்திய அரசின் துறை சார்ந்த உயர் அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.