ADVERTISEMENT

மேட்ரிமோனி விளம்பரம் மூலம் டிவி நடிகைகளின் படங்களை காட்டி திருமணம் செய்து வைப்பதாக மோசடி! - திடுக் தகவல்கள்!

05:36 PM Jun 15, 2018 | Anonymous (not verified)



திருமணம் செய்து வைப்பதாக டி.வி. நடிகைகளின் புகைப்படங்களை காட்டி 4 பேரிடம் மோசடி செய்த கணவன்–மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் பி.எஸ்.என்.எல். அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் இணையதள திருமண தகவல் மையத்தில் மணமகள் தேவை என்று விளம்பரம் செய்து உள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த நாகர்கோவில் அஞ்சுகிராமம் சத்யாநகரை சேர்ந்த சுப்பிரமணியன் (36) என்பவர் முருகனை தொடர்பு கொண்டு தனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி உள்ளார்.

மேலும் பெண்ணுக்கு தாய்– தந்தை இல்லாததால் மாப்பிள்ளை வீட்டாரே திருமண செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை முருகனின் வாட்ஸ் அப் எண்ணுக்கு சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார். பெண்ணின் புகைப்படத்தை பார்த்த முருகன் உடனே திருமணத்துக்கு சம்மதித்ததுடன் திருமண செலவுக்காக சுப்பிரமணியன் கேட்ட ரூ.27 லட்சத்து 81 ஆயிரத்து 705–ஐ கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை வாங்கிய சுப்பிரமணியன், நெல்லை பேட்டையில் உள்ள ஒரு முருகன் கோவிலில் திருமணத்தை வைத்துக் கொள்வதாக கூறினார். சில நாட்கள் கழித்தும் திருமணத்துக்கான ஏற்பாட்டை சுப்பிரமணியன் செய்யவில்லை. மேலும் சுப்பிரமணியனின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அதன்பிறகுதான் முருகன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இந்த மோசடிக்கு சுப்பிரமணியனுக்கு, அவருடைய மனைவி லாவண்யா (32), கொழுந்தியாள் மாயா (22) ஆகிய 2 பேரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து முருகன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முருகனை ஏமாற்றியது போல் சென்னை அடையாறை சேர்ந்த ராஜேந்திரன், அன்பழகன், அமெரிக்காவை சேர்ந்த அரசகுமரன் என்ற ராஜ் ஆகியோரை ஏமாற்றியதும் தெரியவந்தது.

மணமகள் தேவை என்று விளம்பரம் செய்கிறவர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு டி.வி. நடிகைகள் மற்றும் அழகான பெண்களின் புகைப்படத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து காட்டியும், அதன்பிறகு திருமண செலவை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியும், பேச்சுவார்த்தை நடத்தி பணத்தையும், சொத்தையும் வாங்கி விட்டு அவர்களை ஏமாற்றுவிட்டு தங்கள் செல்போனை ‘சுவிட்ச் ஆப்‘ செய்து விட்டு வெளியூர் சென்றுவிடுவதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் மோசடி செய்த ரூ.63 லட்சத்து 42 ஆயிரத்து 873 ரொக்கம், 69 பவுன் தங்க நகைகள், பித்தளை முருகன் சிலை, 4 செல்போன்களையும், லாவண்யா பெயரில் உள்ள வீடு மற்றும் நிலத்தின் பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடியே 5 லட்சம் ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT