பள்ளிபாளையம் அருகே, பி.எஸ்சி., கணிதம் படித்துவிட்டு நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள வெள்ளிகுட்டையைச் சேர்ந்தவர் அய்யாவு (72). பி.எஸ்சி., கணித பட்டதாரியான இவர், நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருவதாக புகார் வந்தது. அதன்பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மோகன்ராஜு, பள்ளிபாளையம் அரசு மருத்துவர் வீரமணி, பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் வீரமணி ஆகியோர் அய்யாவுவை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மீதான புகார் உண்மை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை, காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களின் வேட்டை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.