சென்னை கொளத்தூர் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் தனியாருக்குச் சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குத் தரைதளம் உட்பட 2 தளங்கள் உள்ளன. இதில் உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மையம், காபி ஷாப் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வணிக வளாகத்தில் மின் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து 2 இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதே சமயம் இன்று (13.07.2025) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அங்கு அதிக அளவில் பொதுமக்கள் கூடியிருந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து கொளத்தூர் போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.