Massive fire breaks out in transformer oil tank at power plant premises

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பணிக்கர் குளம் அய்யனார் ஊத்து பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய மின் தொடரமைப்பு கழகத்தின் மின் நிலையம் இயங்கி வருகிறது.கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான காற்றாலை நிறுவனங்கள் மற்றும் சோலார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் இந்த உப மின் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு உயர் மின் கோபுரம் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த உப மின் நிலையத்தின் வளாகத்தில் ஷாட் சர்க்யூட் ஏற்பட்டு 360 கேவிஏ டிரான்ஸ்பார்மர் ஆயில் டேங்கில் இன்று காலையில் திடீரென கரும் புகை ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 17 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரான்ஸ்பார்மர் ஆயில் டேங்கில் ஏற்பட்ட இந்த நெருப்பு

Advertisment

சிறிது நேரத்தில் அருகில் உள்ள பிற பகுதிகளுக்கும் மளமளவென பரவியது. இதில் அங்கிருந்த அனைத்து கண்ட்ரோல் வால்வுகளும் தீயில் கருகி சேதம் அடைந்தன.

Massive fire breaks out in transformer oil tank at power plant premises

தீ விபத்தை உடனடியாக கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த நைட்ரஜன் சப்ரஷன் சிஸ்டம் வேலை செய்யாமல் செயலிழந்து இருந்த காரணத்தினால் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கோவில்பட்டி , கழுகுமலை மற்றும் கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கங்கைகொண்டான் சிப்காட் மற்றும் பிற தனியார் கம்பெனிகளின் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் 6 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த உப மின் நிலையத்தில் நான்கு யூனிட்டுகள் உள்ளது. இதில் ஒரு யூனிட்டில் மட்டும் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மற்ற யூனிட்டுகள் அருகாமையில் இருந்தாலும் தீயணைப்பு வீரர்களின் தீவிர நடவடிக்கையால் தீ பரவாமல் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

Advertisment

டிரான்ஸ்பார்மர் ஆயில் டேங்க் வெடிக்காமல் இருப்பதற்காக கெமிக்கல் நுரையை அதிவேகமாக அடித்து ஆயில் டேங்கை குளிர்வித்து தீ பரவலை கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும் மணல் மூட்டைகளை வைத்து தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட உப மின் நிலையம் பணிக்கர்குளம் கிராமத்துக்கு வெளியே தனியாக இருப்பதால் பொதுமக்களுக்கு நல்வாய்ப்பாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதிக அளவில் கரும்புகை வெளியேறி வருவதால் முழுமையாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்து காரணமாக கயத்தாறு சுற்றுவட்டார கிராமங்களில் மின்விநியோகம் காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை மின்வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி