டாஸ்மாக் கடை முன்பு மேஸ்திரி அடித்துக் கொலை - இருவருக்கு போலீஸ் வலை

Mason beaten to  in front of Tasmac shop - Police net two

ஈரோட்டில் 30 ஆம்தேதி இரவு டாஸ்மாக் கடைக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் பிடிபட்டுள்ளார். தலைமறைவாக உள்ள 2 பேரைப் பிடிக்கத்தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு சூரம்பட்டிவலசு பாரதி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(38)கட்டிட மேஸ்திரி. இவர் நேற்றிரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து சூரம்பட்டிவலசு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு அருகில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு புறப்படுவதற்காக நண்பர்களுடன் கோபாலகிருஷ்ணன் நடந்து சென்றபோது, எதிரே மது குடிப்பதற்காக கிருஷ்ணகுமார் என்பவரோடு சேர்ந்து 3 பேர் வந்துள்ளனர். அப்போது போதையிலிருந்த கோபாலகிருஷ்ணன் கிருஷ்ணகுமார் மீது இடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று கோபாலகிருஷ்ணனை அந்த கும்பல் தாக்கி உள்ளனர். இதில் நிலைகுலைந்து கோபாலகிருஷ்ணன் கீழே விழுந்தார்.

மது போதையில் தான் கீழே விழுந்து கிடக்கிறார் என்று நண்பர்கள் கருதினர். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, கோபாலகிருஷ்ணன் பேச்சு மூச்சு இன்றி இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சூரம்பட்டிவலசு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி கிருஷ்ணகுமார்(30), ஜீவா, ஸ்ரீதர் ஆகிய 3 பேர்தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்ட நிலையில், கிருஷ்ணகுமார் என்பவர் இன்று காலை சிக்கினார். தலைமறைவாக உள்ள ஜீவா, ஸ்ரீதர் ஆகிய இருவரைத்தேடி வருகின்றனர். இதில் ஸ்ரீதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Erode police TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe